Tamil Nadu assembly condolence resolution : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் மற்றும் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tamil Nadu assembly condolence resolution : கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு உட்பட மறைந்த மூத்த அரசியல் தலைவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாகவும், அண்மையில் மறைந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்
இரங்கல் தீர்மானம் வாசித்த பேரவைத் தலைவர் அப்பாவு, கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கரூருக்கு சென்றதோடு, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டதாக கூறினார்.
அதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களையும் பேரவை தெரிவித்துக் கொள்வதாகவும், மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு மணித்துளிகள் மவுன அஞ்சலியும் பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு
சட்டப்பேரவை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. அந்த வகையில், மறைந்த உறுப்பினரகள் புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், துரை அன்பரசன், கலிலூர் ரஹ்மான், சின்னசாமி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.