தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பிலும் முதலில் ஒலித்த வந்தே மாதரம்… மீண்டும் வெடித்த சர்ச்சை

1 hour ago 10

Last Updated:May 10, 2026 4:25 PM IST

ஆளுநர் மாளிகையில் நடந்த தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பிலும் முதலில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது.

News18
News18

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் அர்லேகர் தமிழக முதல்வராக விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விஜயைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். விஜய் முதல்வராக பதவி ஏற்றதும், வீடுகளுக்கு இலவச 200 யூனிட் மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் களைப்பு படை உருவாக்கம் ஆகிய 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய். இதையடுத்து அவர் தலைமை செயலகம் சென்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய், நேராக தலைமைச் செயலகம் சென்று அங்கு கோப்புகளை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தனது கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் நினைவிடமான பெரியார் திடலுக்குச் சென்றார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

இதன் பிறகு தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநர் அர்லேகர், எம்.எல்.ஏ. கருப்பையாவை தற்காலிக சபாநாயகராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மீண்டும் வந்தேமாதரம் பாடல் முதலில் ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் ஒலிக்கப்பட்டது. முன்னதாக காலை முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தது. இதற்கு தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article