“தவெக அரசு காங்கிரஸுக்கு அமைச்சரவை உறுதி செய்யப்பட்டது..” – டெல்லியில் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி

50 minutes ago 9

Last Updated:May 14, 2026 6:48 PM IST

அமைச்சரவையில் இடம் எனும் நிபந்தனையுடன் தவெக கூட்டணியில் இணைந்திருந்தது காங்கிரஸ்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் - ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் - ராகுல் காந்தி

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்று தனி பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாததால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக நாடியது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைத்தது.

இந்தக் கூட்டணி ஒப்பந்தத்திலேயே அமைச்சரவையில் இடம் உட்பட சில ஒப்பந்தங்களும் தவெகவுக்கும் – காங்கிரஸுக்கும் இடையே கையெழுத்தானது. இதன் மூலம், தவெகவுக்கு ஐந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உறுதியாக கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யு.மு.எல். ஆகிய நான்கு கட்சிகளும், நிபந்தனையற்ற ஆதரவை மட்டும் கொடுத்தன. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவுக்கு, அதிமுகவின் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையிலான ஒரு குழுவும் ஆதரவு தெரிவித்து 144 உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதற்கு முன்னதாக கடந்த 9ஆம் தேதி தவெக தலைவர் விஜய், ஆதரவு கட்சிகளின் கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்று, 10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து தவெகவின் 9 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

அதேசமயம், இன்னும் யாருக்கும் எந்த அமைச்சரவை என ஒதுக்காத நிலையில், கடந்த சில தினங்களாகவே நிபந்தனையுடன் கூட்டணிக்கு வந்த காங்கிரஸுக்கு அமைச்சரவை ஒதுக்கவில்லை எனும் பேச்சுகள் எழுந்தவண்ணம் இருந்தன.

இந்தச் சூழலில், இன்று தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேர், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில், டெல்லி சென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து பேசினர்.

இந்தச் சந்திப்பு முடிந்து வெளியேவந்து செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் ஜோடங்கர், “அமைச்சரவையில் இடம் பெற காங்கிரஸுக்கு தவெக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. எத்தனை அமைச்சரவை என்பது குறித்து முதலமைச்சர் விஜய் முடிவெடுப்பார். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Read Entire Article