Last Updated:Mar 02, 2026 3:56 PM IST
மனுஸ்ரீ, தாய் கற்பகம் இறந்த துயரத்தில் இருந்தும், மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ பொதுத் தேர்வை எழுதினார்.

தாய் இறந்த செய்தி கேட்டு துக்கத்தில் தவித்தபோதிலும், பெற்றவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாணவி ஒருவர் பொதுத் தேர்வை எழுதினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிறுநல்லூர் முதுகரை, வசந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். விவசாயியான இவருக்குக் கற்பகம் என்ற மனைவியும், மனுஸ்ரீ என்ற மகளும் இருந்தனர். மனுஸ்ரீ மதுராந்தகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாய் கற்பகம், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார். தாயின் மறைவுச் செய்தி கேட்டு மாணவி மனுஸ்ரீயும் அவரது குடும்பத்தினரும் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தனர்.
அதேநேரத்தில் மாநிலம் முழுவதும் பிளஸ் டூவுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்குவதால் மாணவியை தேர்வுக்கு அனுப்புவதா, வேண்டாமா என உறவினர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. ஆனால் வாழ்க்கையில் தான் பெரிய நிலையை எட்ட வேண்டும் என தாய் நினைத்ததால், தனது தந்தையின் ஆறுதலோடும், மன உறுதியோடும் கண்ணீரை அடக்கிக்கொண்டு, மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மனுஸ்ரீ தேர்வு எழுதச் சென்றார். பெற்ற தாயை இழந்த துயரத்திற்கு இடையிலும் தேர்வெழுத வந்த மாணவியின் செயல் பாராட்டுக்குரியது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
.png)







English (US) ·