நெப்போலியன் - நெப்போலியன்
அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பின் உயரத்தை இரவினில் கீழிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவிதமான உவப்பற்ற மிரட்சியினையே ஏற்படுத்தும். அவரவர் மனநிலைக்கேற்ற அசாதரண நெஞ்சறுவல் அந்தக் கட்டடத்தைக் கடப்பவர்களுக்கு உணர்த்தும். பார்த்தலின் வழி தோன்றும் பிம்ப உணர்வில் கடப்பவையெல்லாம் அவரவர் மனவோட்டத்திற்கான அச்செடுப்புதான்… நிலம் ஒரு சுழற்சியென வாழ்தலும் பின் முடிதலும் பிறகு பிறத்தலும் மீண்டும் மடிதலும் என, தோற்ற மறைவின் ஆதிப் படுகைகளாய் , யுகங்களின் அடுக்குத் தொடர்களாய் அதன்மேல் அடுக்கு உயரங்களாய்… வாழ்வின் கூடுகளாய், நவீன வடிவமைப்புக் கவர் மேனிகளாய் கான்கிரீட் காடுகளாய் நகரத்தின் உச்சந்தலை மிரட்சியென வியாபித்து எழுந்துள்ளன… அதன் ஆழக் கீழே அடர்ந்திருக்கும் மெளனம் , நாளையின் நிச்சயமற்ற கனத்துடன் வேரூன்றும்.
மழை தூறிக்கொண்டிருந்ததால் வெகுநேரம் பற்ற வைக்கமுடியாத சிகரெட்டை ஒருவழியாகக் கஷ்டப்பட்டுப் பற்றவைத்து ஆத்மார்த்தமான ஒரு நீண்ட இழுப்புக்குப்பின் புகையினை வெகு நிதானமாக வெளியே விட்டு விட்டுக் கொண்டிருந்தார் சின்ஹீ. குடியிருப்பின் கீழ் வெற்றுத்தளத்தில் திரியும், இருக்கைகளில் பகல் நேரத்தில் உறங்கும், தனக்குத்தானே பேசிக்கொண்டபடி நடக்கும் அவரை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பூனைகளுக்கும் தெரியும்… எவர்பற்றியும் அலட்டிக்கொள்ளாத அலட்சிய முகக்குறிப்பும், பரபரப்பான இந்த வையகத்தின் உட்பரப்பில் சோதனை எலிகளாய் இயங்கும் மானுட ஜீவிதங்களின் நீர்க்குமிழி அலைதலும்… தான் புகைக்கும் சிகரெட்டின் புகையலைதலைவிடக் குறுகிய ஆயுள் கொண்டது போன்ற பாவனையுடன் ஒளி மங்கிய தன் கண்களை அங்கும் இங்குமென உருட்டிக் கொண்டிருந்தார் . அவரைக் கடக்கும் எவருக்கும் அவர் ஒரு பொருட்டல்ல. குடியிருப்புப் பேட்டைகளின் தாழ்வாரங்களுக்கோ அவரைப்போல் யாரெனும் ஒருவர் நிச்சயம். பெரும்பாலும் இரண்டாவது தளத்திற்கு கீழிருக்கும் தாழ்வாரங்களில் மதிய நேரத்தில் வீசும் காற்று மெல்லிய சிறுசத்தத்தோடு உள்ளிறங்கி , வட்ட சிமெண்ட் இருக்கைகளில் உரித்துப்போட்ட வேர்க்கடலைக் கூடுகளைச் சிதறிப்போடும். கழிவு நீர்க் குழாய்களின் நெளி - நீள் - செங்குத்து உயர ஓட்டங்கள் தாழ்வாரத் தளத்தின் பார்வைக்கு குழாய்தாங்கி திராட்சைக் கொடிகளாய்ப் படர்ந்திருக்கும். மதிய வெயிலிலும் மஞ்சள் நெருப்புடன் வழிபாட்டுத் தாள்களைக் கூண்டுக்குள் எரித்தபடி சிலர்…
வடகிழக்கு ரயில் பாதையைக் கடக்கும் பெருவிரைவு ரயில்களின் தடதடப்புச் சத்தம் சன்னமாய் ஒலிக்கின்றது. குப்பைத் தோம்புகளுக்கு அருகே சுக்காய் கிழிபட்ட வெற்றியடையா பிங் நிற லாட்டரிச்சீட்டுகள் வெறுப்புடன் சிதறிக்கிடக்கின்றன. தபால்கூடுகளின் பெட்டிக்கு மேலே பொட்டுவைத்த மூன்று கண் கேக்குகளும் , விளம்பரத்தாள்களும் கலைந்து கிடக்கின்றன . அடித்தளத் தலைவர்களைச் சந்திக்கும் நேரம் விபரமாக எழுதப்பட்ட கால அட்டவணை அடித்தரைத் தூண்களில் தொங்கவிடப்பட்டுள்ளன. மின்தூக்கி வாசல்களில் மினி டிஜிட்டல் விளம்பரக் காணொளிகள் . கைகளில் உணவுப்பொட்டலங்களுடன் சீருடை அணிந்த உணவு விநியோகர், கொடுக்கப்படவேண்டிய வீட்டு எண் புளோக் சரிபார்க்கிறார்… உயரத்திலிருந்து வீட்டுக் குப்பைகள் வந்தடையும் குப்பைக்குழாய்த் தொட்டியின் அடித்தளம் வீட்டு எண்கள் பதிக்கப்பட்ட இரும்புக் கதவுகளோடு, அதனைச் சுற்றிச் சிதறியிருக்கும் மிச்சங்களைப் புறாக்களும் குருவிகளும் கொத்துகின்றன.
மரங்கள் அதிகமற்ற வாகன நிறுத்தப் பேட்டைகளில் வாகனங்களின் உறுமல்கள் அதனதன் விலைக்கேற்ப… குழந்தைகளின் இடைவிடாத கேள்விகளுக்குப் பதிலளித்தபடியே கைகளைப் பிடித்துக் கொண்டு கடக்கிறார்கள் பெற்றோர்கள். எப்பொழுதும் தலைநிறைய மல்லிகைப்பூவும் குங்குமப் பொட்டுடன் சீனமுகத்துடன் லெட்சுமியம்மாள் தூரத்தில் சிரித்தபடி எனக்குப் புன்னகையுடன் கையசைக்கிறார். அருகே மைதானத்திலிருந்து வரும் இசைச்சத்தம்… கை கால்கள் இடுப்பைச் சந்தோஷமாய் வளைத்தபடி மூத்த குடிகள் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள் . குழந்தைகளும் சிறுவர்களும் மகிழ்ச்சியுடன் கீழ்த்தளத்தில் சத்தமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்…
அப்பொழுதுதான் அத்தனையும் கலைக்கும் விதமாய் அவசர ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு வந்து நின்றது …
நெப்போலியன்
.png)





English (US) ·