Last Updated:Feb 08, 2026 6:42 AM IST
சென்னை சைதாப்பேட்டையில் திமுக கபடி விழாவில் வடிவேலு, திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனவும், ஸ்டாலின் தலைமையில் மகளிர் திட்டங்கள் சிறப்பாக நடக்கின்றன என்றும் தெரிவித்தார்.

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைக்கும் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் நடைபெற்ற கபடி போட்டி பரிசளிப்பு விழாவில் தான், நடிகர் வடிவேலு பஞ்ச் வசனம் பேசி, விளையாட்டு மேடையை அனல் கிளப்பும் அரசியல் மேடையாக்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் நடந்த மகளிர் கபடி போட்டியின் இறுதிப்போட்டியில் பரிசு வென்ற அணிகளை பாராட்டி பேசிய வடிவேலு, மகளிருக்கான சிறப்பான திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை என்றும், குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு கொண்டுவந்ததை குறிப்பிட்டு பேசினார். வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என்பதை விளையாட்டு போட்டி எடுத்துக்காட்டுவதாக வடிவேலு குறிப்பிட்டார்.
திமுக கூட்டணி எக்காலத்திலும் தோற்காது என்றும், தேர்தலுக்கு பிறகு, பல நிகழ்வுகள் நடக்க உள்ளதாகவும் வடிவேலு தெரிவித்தார். கபடி வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசை சுட்டும் வகையிலும், எம்ஜிஆர் நடித்த அரசக்கட்டளை திரைப்படத்தின் பாடலை பாடி அரங்கில் இருந்தவர்களை ரசிக்க வைத்தார்.
நடிகர் வடிவேலு திமுகவிற்கு ஆதரவாக பேசுவது இது முதல் முறையல்ல. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இருந்த போதே, 2011 தேர்தல் களத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணியை எதிர்த்து சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். அப்போது விஜயகாந்தை விமர்சித்து பரப்புரை செய்தது பேசுபொருளானது. தற்போது விஜய் அரசியல் களத்தில் உள்ள நிலையில், திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆரூடம் கூறியிருக்கிறார் வடிவேலு.
Location :
Chennai,Tamil Nadu
.png)







English (US) ·