“திருமாவளவன் முதலமைச்சர்… அதிமுகவினருக்கு அமைச்சர் பதவிகள்…” – சி.வி. சண்முகம் பரபரப்புப் பேட்டி

49 minutes ago 8

அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளராக கொறடாவை நியமித்ததாக சொல்கிறார். சட்டத்தின்படியும், மரபின்படியும் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி, அவர்கள் ஒப்புதலுடன் தான் கொறடாவையும், சட்டமன்றக் குழுத் தலைவரையும் நியமிக்க வேண்டும்.

47 பேர் கையெழுத்திட்டு கொடுத்ததாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி, எங்கே, எப்போது, எதற்காக பெற்றார் என அவரால் சொல்ல முடியும். எங்கே எப்போது சட்டமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா. அவர் பக்கம் நியாயம் இருந்தால், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வெளியிட முடியுமா?

புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தபோது இரவோடு இரவாக அவசரமாக அங்கு பயணித்த எடப்பாடி பழனிசாமி, மேலிடத்தில் இருந்து ஒப்புதல் பெற்றுவிட்டேன். திமுக வெளியில் இருந்து ஆதரவு தருகிறது. நான் முதலமைச்சராகிறேன், நீங்கள் எல்லாம் அமைச்சர்களாகலாம் எனத் தெரிவித்து கையெழுத்து பெற்றார்.

8ஆம் தேதி எங்கள் தலைமையில் நடைபெற்ற சட்டமன்றக் குழு கூட்டத்தில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று எஸ்.பி. வேலுமணியை தலைவராகவும், சி. விஜயபாஸ்கரை கொறடாவாகவும் நியமித்தோம். 47 பேர் தன்னை ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் கொடுத்த கடிதம் போலியானது. எங்கள் தரப்பில் 27 பேர் ஆதரிப்பதாக கடிதம் கொடுத்துள்ளோம்.

4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது நான் வெற்றிச் சான்றிதழை பெற்றுவிட்டு, சென்னைக்கு வந்துக்கொண்டிருந்தேன். சுமார் 7 மணி அளவில் செங்கல்பட்டு அருகே வரும்போது இரண்டு திமுக அமைச்சர்கள் என்னைத் தொடர்புகொண்டனர். முதலில் பேசியவர், ‘பார்த்து நல்ல பதவியை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார். அடுத்து ஒருவர் போன் செய்து, அவர் ஏதோ பேசுகிறார் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மறுநாள் (5ஆம் தேதி) காலை எங்கள் பொதுச் செயலாளர் போன் செய்து, ‘நான் டெல்லியில் பேசிவிட்டேன், திமுக நமக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறது, நாம் ஆட்சி அமைக்கிறோம். திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு அமைச்சர் பதவியும், நமக்கு 25 அமைச்சர்களும் கிடைப்பார்கள்’ என்றார். நான் அவரிடம் திமுகவை எதிர்த்து எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், மூன்று தலைமுறையாக அவர்களை எதிர்த்து அரசியல் செய்துவருபவர்களை எப்படி அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என நான் கேட்டேன்.

நாங்கள் பதவிக்கு ஆசைப்பட்டதாக சொல்கிறார். இவர் எதற்கு ஆசைப்பட்டார். அரசியல் செய்யும் அனைவரும் பதவிக்குத்தான் ஆசைப்படுவார்கள். அதிமுக இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் 47 பேர் வெற்றி பெற்றதை மிகப்பெரும் வெற்றி என பேசுகிறார். 96ல் ஜெயலலிதா தோல்வி அடைந்தபோது அதனை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், அந்த மனப்பக்குவம் இவருக்கு இல்லை.

2019, 2021, 2024, 2026 என தொடர்ந்து தோல்வி. ஆனால், எந்தத் தோல்விக்கும் அவர் பொறுப்பேற்கவில்லை. திருமாவளவனை முதலமைச்சராக்குகிறோம் என திமுக தரப்பில் முன்மொழியப்பட்டது. மற்ற அனைத்து அமைச்சர் பதவிகளும் அதிமுகவுக்கு என பேசப்பட்டது. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. நான் தான் முதலமைச்சர் அல்லது நாம் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என எடப்பாடி பழனிசாமி சொன்னார்.

அதிமுக, தவெக இரண்டுக்கும் எதிர் திமுக தான். எனவே திமுகவுடன் போக நீங்கள் முடிவு செய்யும்போது ஏன் தவெகவுடன் செல்ல முடிவெடுக்கக்கூடாது என கேட்டோம். இதில்தான் எங்களுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதான் உண்மையில் நடந்தது” எனத் தெரிவித்தார்.

Read Entire Article