Oplus_131072

பெங்களூரு: ஜூலை 24-
தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை ஆள் சேர்ப்பதற்காக நிதி வழங்கி வந்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், பெங்களூருவில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை (இ.டி.) அதிகாரிகள், ரூ.7.50 லட்சம் ரொக்கம், எலக்ட்ரானிக் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
‘இக்ரா வெல்ஃபேர் டிரஸ்ட்’, ‘கைடன்ஸ் ஃபார் மேன்கைண்ட் டிரஸ்ட்’ மற்றும் சில நபர்களுக்கு சொந்தமான 8 இடங்களில் கடந்த ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தியது.
முன்னதாக, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தொழிலதிபர் இர்பான் நசீர், தனியார் நிறுவன மேலாளர் அப்துல் அகமது கெடர், பெங்களூரு கிம்ஸ் மருத்துவமனை டாக்டர் முகமது தாகீர் முகமது மற்றும் மென்பொருள் பொறியாளர் ஜுஹாப் ஹமீத் ஷகீல் முன்னா ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான முகமது ஷிஹாப் தலைமறைவாக உள்ளார். இவர்கள் 5 பேருக்கு எதிராகவும் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பிரபல மருத்துவமனையில் கண் மருத்துவயாளராக பணியாற்றிய டாக்டர் அப்துர் ரஹ்மான் என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டார். 2020-ல் பதிவான வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத டாக்டர் அப்துர் ரஹ்மான் அளித்த தகவலின் பேரில், ‘இக்ரா வெல்ஃபேர் டிரஸ்ட்’ அமைப்பை நிர்வகித்து வந்த இர்பான் நசீர் உள்ளிட்ட 3 பேரை 2021-ல் கைது செய்தனர்.
இந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடங்கிய அமைப்புகளின் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகள் குறித்தும், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ‘இக்ரா கேம்ப்’ என்ற பயிற்சி முகாம் மற்றும் குர்ஆன் ஆய்வு கூட்டங்கள் மூலம் தீவிரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்களை சேர்ப்பதற்கு தூண்டினர். அதற்கு பதிலாக இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கினர். அமைப்பில் சேர்ந்த இளைஞர்களை துருக்கி வழியாக சிரியாவிற்கு அனுப்பி அமைப்பில் சேர்த்தனர் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன் பின்னணியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) எதிர்ப்பு போராட்டங்களின் போதும் ஐ.எஸ்.ஐ.எஸ். சித்தாந்தத்தைப் பரப்ப முயன்றதாக என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டியிருந்தது. இதன் பிறகு வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகள் குறித்து தகவல் சேகரித்து தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.