தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007

1 hour ago 13

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) என்பது வெறும் காகிதத்திலிருக்கும் சட்டம் மட்டுமல்ல; கைவிடப்பட்ட பல முதியவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் ஒரு மிகச் சிறந்த ஆயுதம் எனலாம்.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித் துயரங்களிலிருந்து மீண்ட முதியவர் ஒருவரின் கதை இது:

கடும் உழைப்பாளியான சிவசாமிக்கு 72 வயது. அவரது ஒரே மகன் ரமேஷ். பெரும் விவசாயியான சிவசாமி, வாழ்நாள் முழுவதும் தனது நிலத்தில் கடுமையாக உழைத்துப் பெரும் சொத்து சேர்த்து வைத்திருந்தார். தன்னுடைய மகனை நன்றாகப் படிக்க வைத்த அவர், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டுத் திருமணமும் செய்து வைத்தார்.

மகன் மற்றும் மருமகளின் அன்பை எதிர்பார்த்து, தனது பெயரில் இருந்த வீடு, நிலம், சேமிப்புப் பணம் என அனைத்தையும் மகனின் பெயருக்கு எழுதி வைத்தார் சிவசாமி. ஆனால், சொத்து கைக்கு வந்த சில மாதங்களிலேயே ரமேஷின் போக்கில் மாற்றம் தெரிந்தது. சிவசாமிக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை; மருந்து வாங்கப் பணம் தர மறுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், “வீடு என் பெயரில் இருக்கிறது, நீங்கள் முதியோர் இல்லத்திற்குச் செல்லுங்கள்” என்று கூறி சிவசாமியை வீட்டை விட்டு வெளியேற்றினான் ரமேஷ்.

தெருவில் நின்ற சிவசாமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போதுதான் ஒரு வழக்கறிஞர் மூலம் ‘பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்புச் சட்டம், 2007’ பற்றி அவருக்குத் தெரிய வந்தது.

தீர்ப்பாயத்தின் அதிரடித் தீர்ப்பு

சிவசாமி, வருவாய் கோட்டாட்சியர் (RDO) தலைமையிலான பராமரிப்புத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தார். அவரது புகாரை விசாரித்த தீர்ப்பாயம், மகனிடம் போதிய வருமானம் இருந்ததால், சிவசாமிக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைப் பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில்தான் சிவசாமி தனது சொத்தை மகனுக்கு எழுதிக் கொடுத்தார்; ஆனால் மகன் கவனித்துக் கொள்ளவில்லை என்பது நிரூபணமானதால், அந்தச் சொத்து மாற்றத்தைச் ‘செல்லாது’ என்று தீர்ப்பாயம் அறிவித்தது. இதன் மூலம் தன் மகனிடம் இழந்த சொத்து முழுவதையும் சிவசாமி மீண்டும் தன் வசப்படுத்தினார்.

நீங்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்

  • எளிமையான நடைமுறை: பாதிக்கப்பட்ட முதியவர்கள் இச்சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வழக்குரைஞர்கள் தேவையில்லை. முதியவரே நேரடியாகவோ அல்லது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
  • காலக்கெடு: புகார் மனு மீது 90 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.
  • யார் விண்ணப்பிக்கலாம்? 60 வயது பூர்த்தியான பெற்றோர் (தத்தெடுத்த பெற்றோர் உட்பட) மற்றும் தங்கள் வாரிசுகளிடம் இருந்து பராமரிப்பு கோரும் முதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • யாருக்குப் பொறுப்பு உண்டு? வாரிசுகள் (மகன், மகள், பேரன், பேத்தி) பராமரிக்க வேண்டும். வாரிசுகள் இல்லாத பட்சத்தில், முதியவரின் சொத்து யாருக்குச் சேரப்போகிறதோ அந்த உறவினர்கள் முதியவரைப் பராமரிக்கக் கடமைப்பட்டவர்கள்.
  • தண்டனை: முதியவர்களைப் பராமரிக்கத் தவறுவது அல்லது அவர்களைக் கைவிடுவது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அடிப்படை உரிமை

உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி என்பது ஒவ்வொரு முதியவரின் அடிப்படை உரிமை. சமூகம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், தனிக்குடும்ப மோகத்தால் முதியவர்கள் பாரமாகக் கருதப்பட்டு விரட்டி அடிக்கப்படுகின்றனர்.

‘தாம் பெற்ற பிள்ளைக்கு எதிராகப் புகார் அளிப்பதா?’ என்ற முதியவர்களின் தயக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பலர் முதியவர்களைத் துயரத்தில் தள்ளுகிறார்கள். சொத்துகளைப் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கும் முன்பே, “என்னை இறுதிவரை பராமரிக்க வேண்டும்” என்ற நிபந்தனையைப் பத்திரத்தில் சேர்ப்பது சட்டப்படி அவர்களுக்குப் பாதுகாப்பைத் தரும். ஒருவேளை அப்படிச் சேர்க்காவிட்டாலும், இச்சட்டம் அவர்களுக்குத் துணை நிற்கும்.

நன்றி: ‘தமிழ் இந்து’ 2.3.2026

Read Entire Article