நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டப்பேரவை கதவுகளை மூட சொல்வது ஏன் தெரியுமா?

1 hour ago 15

தவெகவுக்கு ஏற்கனவே காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் என 110 (திருப்பத்தூர் எம்எல்ஏ சேர்க்காமல்) உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இதனையடுத்து, இன்று நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் பேரவையில் முன்மொழிந்தார். அதன்பின் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்களில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த 25 பேர் தவெக ஆதரவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பில் இருந்து வெளியேறின. மதிமுகவின் 2 உறுப்பினர்களும் அவைக்கு வராமல் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். பாஜக, பாமக உறுப்பினர்கள் தங்களுடைய வாக்கினை செலுத்தாமல் நடுநிலையாகச் சென்றனர்.

நம்பிக்கை தீர்மானத்தை இரண்டு விதமான வாக்கெடுப்புக்கு விடலாம். குரல் வாக்கெடுப்பின் மூலம் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்கள் ‘ஆம்’ என்றும், எதிரானவர்கள் ‘இல்லை’ என்றும் குரல் எழுப்புவார்கள். எந்தத் தரப்பின் குரல் அதிக சத்தமாக ஒலிக்கிறதோ, அந்தத் தரப்பு வென்றதாக சபாநாயகர் அறிவிப்பார். இதில் எந்த எம்.எல்.ஏ யாருக்கு வாக்களித்தார் என்பதற்கான தனிப்பட்ட அதிகாரப்பூர்வமான பதிவு இருக்காது.

ஆனால், இன்று எண்ணிக்கை அடிப்படையிலான (Division Vote) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபாநாயகர் ‘டிவிஷன்’ முறைக்கு உத்தரவிட்டார். இந்த முறையின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம், எந்த உறுப்பினர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார், யார் எதிராக வாக்களித்தார் அல்லது யார் நடுநிலை வகித்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இறுதியாக, தவெக அரசுக்கு ஆதரவாக 143 பேர் வாக்களித்தனர். தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 பேர் வாக்களித்தனர். பாமக 4 உறுப்பினர்களும், பாஜக உறுப்பினரும் நடுநிலையாக வாக்களித்தனர்.

இந்நிலையில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாக 'இறுதி எச்சரிக்கை மணி' ஒலிக்கப்பட்டது. அதன்பின், அவையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூடுவதற்குச் சபாநாயகர் உத்தரவிட்டார். அனைத்து நுழைவு வாயில்களையும் மூடுவது என்பது ஜனநாயக மரபாகப் பார்க்கப்படுகிறது.

ஜனநாயக முறையில், ஒரு அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க, வாக்கெடுப்பின் போது அவையில் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கு மேல் (Simple Majority of those Present and Voting) ஆதரவைப் பெற வேண்டும். உதாரணமாக, 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 118 உறுப்பினர்களின் ஆதரவு என்பது முழுமையான பெரும்பான்மை. ஆனால், வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் பல்வேறு காரணங்களால் 200 உறுப்பினர்கள் மட்டுமே அவைக்குள் இருக்கிறார்கள் எனில், அங்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே அரசு தப்பிவிடும்.

கதவுகள் திறந்திருக்கும் பட்சத்தில், சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே வெளியேறவோ அல்லது தாமதமாக உள்ளே நுழையவோ முயலலாம். இது வாக்கெடுப்பின் முடிவைத் துல்லியமற்றதாக்கிவிடும். இதன் காரணமாக, கதவுகளை மூடும் மரபு கடைபிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவைக்கு தாமதமாக வந்து கதவுகள் மூடப்பட்ட காரணத்தினால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போன சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. உதாரணமாக, 2022ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களான அசோக் சவான் மற்றும் விஜய் வடேட்டிவார் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அதற்குள் அவையின் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு தொடங்கிவிட்டதால், அவர்களால் அந்த முக்கியமான வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article