ரூ.100 கோடி மோசடி: பெங்களூரில் ஆடவர் கைது

1 hour ago 9

3a7bb8a0-8a90-4082-b0d2-5298e01f4331

புதுடெல்லியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் அளித்த மோசடி தொடர்பான புகாரை அடுத்து, பெங்களூரில் தங்கியிருந்த ரவி ரத்தோர் கைது செய்யப்பட்டார். - படம்: தி எக்கானமிக் டைம்ஸ்

புதுடெல்லி: வணிக இணையத்தளம் மூலம் நூற்றுக்கணக்கானோரிடம் முதலீடு என்ற பெயரில், பண மோசடி செய்த இளையரை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த 31 வயதான ரவி ரத்தோர் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகி இணையத்தளம் ஒன்றைத் தொடங்கினார்.

‘இணைய வர்த்தகம் மூலம் பெரும் வருவாய் ஈட்டலாம்’ என்று இவர் செய்த விளம்பரத்தைப் பார்த்து ஏராளமானோர் அவரது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர்.

ஏறக்குறைய நூறு கோடி ரூபாய் முதலீடாகக் குவிந்ததும் திடீரெனத் தலைமறைவானார் ரவி ரத்தோர். மொத்தம் 14,000 பணப்பரிமாற்றங்கள் மூலம் 626 பேரிடம் இவர் பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் அளித்த மோசடி தொடர்பான புகாரை அடுத்து, பெங்களூரில் தங்கியிருந்த ரவி ரத்தோர் கைது செய்யப்பட்டார்.

இவரது சொந்த ஊர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சனாவாத் நகர் என்பதும் சில ஆண்டுகளுக்கு முன்பு பங்குச்சந்தைப் பரிமாற்றத்தைக் கவனிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் குறிவைத்துச் செயல்பட்டுள்ளார் ரவி ரத்தோர்.

தன்னிடம் குவிந்த பணத்தைக் கொண்டு சொந்த மாநிலத்தில் ஆடம்பர மாளிகையைக் கட்டியதுடன், பல அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் வாங்கியுள்ளார். ரவி ரத்தோரிடம் ஏராளமான ஆடம்பர கார்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் பயன்படுத்திய கைப்பேசி, மடிக்கணினிகளைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

Read Entire Article