Last Updated:May 16, 2026 6:52 PM IST
தொழில்நுட்ப ரீதியாகத் தமிழ்நாடு சிறந்த வாய்ப்புகளை வழங்கியிருந்தும், அரசியல் காரணங்களுக்காக இத்திட்டம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது - டிஆர்பி ராஜா

ஒசூரில் இருந்து ஆந்திராவிற்கு போர் விமான சோதனை மையத் திட்டம் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தியுள்ளார்.
ஓசூருக்கு வரவேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன போர் விமானச் சோதனை மையத் திட்டம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் டி.ஆர்.பி.ராஜா பகிர்ந்துள்ளார். அதில், எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியத் பாதுகாப்புத் துறைத் திட்டமான போர் விமான சோதனை மையத்தை ஓசூரில் அமைக்க மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் முந்தைய திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தததாகவும், இதற்காக 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாகத் தமிழ்நாடு சிறந்த வாய்ப்புகளை வழங்கியிருந்தும், அரசியல் காரணங்களுக்காக இத்திட்டம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று சாடியுள்ள டி.ஆர்.பி.ராஜா, இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் உள்கட்டமைப்பு சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுத வேண்டும் என்றும் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை போராடிப் பெறக்கூடிய ஒரு தொழில்துறை அமைச்சர் உடனடியாகத் தேவைப்படுவதாகவும் டி.ஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.
Location :
Chennai,Tamil Nadu
.png)








English (US) ·