‘சிங்கப்பூர் நிதித்துறை’ விரிவுரைத் தொடரின் ஒரு பகுதியாக அக்டோபர் 13ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் திரு பியூஷ் குப்தா தமது முதலாவது உரையை ஆற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நிதித்துறையில் சிங்கப்பூர் தொடர்ந்து துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று டிபிஎஸ் முன்னாள் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா வலியுறுத்தி இருக்கிறார்.
‘சிங்கப்பூர் நிதித்துறை’ விரிவுரைத் தொடரின் ஒரு பகுதியாக அக்டோபர் 13 ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் திரு குப்தா தமது முதலாவது உரையை ஆற்றினார்.
நிதி மையமாக சிங்கப்பூரின் எழுச்சி பற்றி அவர் எடுத்துரைத்தார்.
“காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப நமது நிதித்துறை மாறி வந்தாலும், நிலையானதாக இருப்பது ஒரு துணிச்சலான மற்றும் முன்னோடி மனப்பான்மை, நெருக்கமான கூட்டாண்மை மற்றும் தொலைநோக்குப் பார்வையே,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிச் சேவைத் துறை 14% பங்களிக்கிறது.
அதுமட்டுமின்றி, ஆசியாவின் ஆகப் பெரிய எண்ணெய் வணிக மையமாகவும் உலகின் இரண்டாவது பெரிய வேளாண் வணிக மையமாகவும் அனைத்துலக நிதித்துறையில் சிங்கப்பூர் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று திரு குப்தா குறிப்பிட்டார்.
இந்த வளர்ச்சிக்கு ஆசிய டாலர் சந்தை, ஈரடுக்கு வங்கி முறை, சிங்கப்பூர் அனைத்துலக நாணயப் பரிவர்த்தனை, முக்கிய நிதித் துறைகளின் விரிவாக்கம் ஆகியவை வழியமைத்துக் கொடுத்தது என்று அவர் விளக்கினார்.
சிங்கப்பூரின் அசாதாரண தனியார்த் துறை மாதிரியையும் திரு குப்தா பாராட்டினார்.
“முதன்மை நிதி உரிமை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், அதன் நிர்வாகம் தனியார்மயமாக்கப்பட்டது. இதுவே அதன் சிறப்பு,” என்றார் அவர்.
கேள்வி-பதில் அங்கத்தில் சிங்கப்பூர் நிதித் துறையின் வருங்காலம் பற்றி சிலர் எழுப்பிய கேள்விகளுக்கும் திரு குப்தா பதிலளித்தார்.
கடந்த காலங்களில் நிதி சார்ந்த துணிச்சலான முடிவுகளை எடுப்பது எளிதாக இருந்திருக்கும் என்று தெரிவித்த திரு குப்தா, “இன்று நாம் அதிகமாக இழக்க நேரிடலாம் என்பதால் நாம் தொடர்ந்து துணிச்சலான முடிவுகளை எடுப்பது அவசியம்,” என்று வலியுறுத்தினார்.