Last Updated:Dec 21, 2025 8:30 AM IST
Sreenivasan | லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்களும் ரசிகர்களும் சீனிவாசனின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மலையாள திரையுலகில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்களில் கோலோச்சி வந்தவர் ஸ்ரீனிவாசன். நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். 1956- ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த சீனிவாசன், பட்டப்படிப்பை முடித்த பின்னர், சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
இதே திரைப்படக் கல்லூரியில் தான் ரஜினிகாந்தும் பயின்றார். அப்போது இருவருக்கும் மிகவும் ஆழமான நட்பு ஏற்பட்டது. தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீனிவாசன் மறைவு அதிர்ச்சியளிப்பதாக ரஜினிகாந்த் உருக்கமுடன் கூறியுள்ளார். 1976- ஆம் ஆண்டு சீனிவாசன் மணிமுழக்கம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்தார். சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடத்திலும் நடித்துள்ளார். மலையாள படங்களில் மோகன்லால் மற்றும் சீனிவாசன் இணைந்தால் அந்தப் படம் நிச்சயம் நகைச்சுவைக்கும், சமூகக் கருத்துக்களுக்கும் பெயர் பெற்றதாக இருக்கும்.
உதாரணத்திற்கு நாடோடிக்காற்று என்ற திரைப்படம்... இதில் மோகன்லாலும் சீனிவாசனும் ஏற்று நடித்த தாசன் மற்றும் விஜயன் கதாபாத்திரங்கள் இன்றும் கேரள மக்களிடையே மிகவும் பிரபலம். இதில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி இன்று வரை மலையாள "மீம்ஸ்" உலகிற்குப் பெரும் தீனியாக உள்ளது... 'ஓடருதம்மாவ அலரியம்', 'சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்', 'காந்திநகர் 2வது தெரு', 'பட்டணபிரவேசம்', 'தலையணை மந்திரம்', 'சந்தேசம்' உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதி உள்ளார்.
சத்யன் அந்திக்காடு இயக்கிய 'சந்தேசம்' படத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசியலை நையாண்டி செய்யும் மிகச்சிறந்த வசனங்கள் சீனிவாசன் எழுதியது தான். அரசியல் நையாண்டி படங்களுக்கு இதுவே 'பைபிள்' போன்றது என திரை விமர்சகர்கள் கூறுவது உண்டு. 'காந்திநகர் 2வது தெரு', 'கத பறையும் போழ்' படங்கள் சத்யராஜின் 'அண்ணாநகர் முதல்தெரு, ரஜினியின் குசேலன்' என தமிழில் ரீ-மேக் ஆனது.
'சிந்தவிஷ்டாய ஷியாமளா' என்ற படத்திற்காக சீனிவாசன் தேசிய விருது பெற்றார். இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் அவர். இந்த படம் தான் தமிழில் 'சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' என்ற பெயரில் ரீ-மேக் ஆனது. 2019- ஆம் ஆண்டு வரை பிஸியாக நடித்து வந்த சீனிவாசன் அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக நடிப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். 2020க்கு பிறகு இவர் 7 படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
தமிழில் பார்த்திபன் நடித்த புள்ள குட்டிக்காரன் மற்றும் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா என இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ள சீனிவாசன் மலையாளம், தமிழ் தவிர வேறு எந்த மொழி படங்களிலும் நடித்ததில்லை. கடைசியாக அவரது மகன் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் 'வர்ஷங்களுக்கு சேஷம்' என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். உடல்நலக் குறைவுக்குப் பிறகு அவர் திரையில் தோன்றிய இந்தத் தருணம் ரசிகர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.
சாமியப்பன் என்ற கதாபாத்திரத்தில் சென்னையில் லாட்ஜ் நடத்தி வரும் உரிமையாளராகவும், தமிழ் மற்றும் மலையாளம் கலந்து பேசும் ஒருவராகவும் அவர் நடித்திருப்பார். சீனிவாசன் நிஜ வாழ்க்கையில் அடையார் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது தங்கியிருந்த இடங்கள் மற்றும் அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை சென்னையைச் சுற்றியே அமைந்திருந்தது. எனவே, அதே போன்ற ஒரு சென்னை பின்னணியில் அவர் கடைசியாக நடித்தது அவரது நிஜ வாழ்க்கையோடு ஒத்துப்போவதாக இருந்தது.

Sabarimala | சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!
சபரிமலையில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க தடை விதித்து காவல்துறை எச்சரிக்கை.
வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்படும்.
உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் புல்லுமேடு பகுதியில் மருத்துவ குழு தயாராக உள்ளது.
.png)






English (US) ·