சிங்கப்பூர்க் கலைத்துறையில் பல கலாசாரங்களின் கூறுகளையும் இணைக்கும் பன்முகத் திட்டங்களுக்கான புதிய 20 மில்லியன் வெள்ளி மானியத்தை நிர்வகிக்க 12 உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிபர் சவால் அறநிதித் திரட்டு அமைப்பும் தேசியக் கலை மன்றமும் புதன்கிழமை (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்தன.
கலாசாரத் தலைவர்கள், கலைத்துறைக் கல்வியாளர்கள், கலைஞர்களை உள்ளடக்கிய இக்குழுவிற்கு, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் தியோ சின் வூன், லாசால் கலைக் கல்லூரி முதல்வர் வெங்கா புருஷோத்தமன் இருவரும் கூட்டாகத் தலைமை தாங்குகின்றனர். கலைத்துறையில் பல்லினப் பண்பாட்டின் பன்முகத்தன்மையை ஆராய்ந்து வரையறுப்பது இக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.
வலுவான கலைக் கண்ணோட்டத்தைக் கொண்ட திட்டங்களுக்கும் சிங்கப்பூரின் கலைச்சூழலை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிய ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டையும் பல கலாசாரக் கலைகளையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த மானியம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, சிங்கப்பூரின் தனித்துவமான பல்லினக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் புதுமையான கலைப் படைப்புகள், கலைஞர்களுக்கான பயிற்சி மேம்பாடுகள், கலைத் துறையைத் தன்னிறைவு பெற்றதாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு இதன்கீழ் நிதி ஆதரவு வழங்கப்படும்.
பல்லினப் பண்பாட்டுக் கலைத் தயாரிப்புகளுக்கு 500,000 வெள்ளி வரையிலும், கலைச்சூழல்சார் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 300,000 வெள்ளி வரையிலும் நிதி ஆதரவு வழங்கப்படும்.
இந்த மானியத்திற்கு ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் மேல்விவரங்களுக்கு, https://www.nac.gov.sg/support/funding-and-schemes/multicultural-arts-programme-grant/overview?ref=inline-article என்ற இணைய முகவரியில் தேசியக் கலை மன்றத்தை நாடலாம்.
தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு டிசம்பர் 30க்குள் தகவல் தெரிவிக்கப்படும்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்த மானியத்தின் நோக்கம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், கலைஞர்கள் இயல்பான வழிகளில் தங்களின் சொந்தப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று, ஒன்றிணைந்து புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதன் மூலம், காலப்போக்கில் சிங்கப்பூருக்கே உரிய பல்லினப் பண்பாட்டு அடையாளம் மேலும் ஆழமாக உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்தைக் கண்காணித்து வழிநடத்த உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர் திரு வெங்கா புருஷோத்தமன், இளையர்கள் ‘பன்முகக் கலாசாரம்’ எனும் கருத்தை முக்கியமாகக் கருதுகின்றனர் என்றும் இளம் கலைஞர்கள் தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் ஆராய்வதை உக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் உள்ளூர்க் கலைஞர்களும் கலைக் குழுக்களும் தங்களின் தனித்துவமான கலைக் கண்ணோட்டத்தைச் செயல்படுத்த நல்ல வாய்ப்பு கிடைப்பதுடன், சிங்கப்பூரின் கலைத் துறை உலக அளவில் மேலும் வலுவடைய இது வழிவகுக்கும் என்று ஆலோசனைக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
.png)





English (US) ·