பழிக்குப்பழி வசனத்துடன் பேனர் வைத்து அச்சுறுத்தல்... இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்து ரவுடிஷத்தில் ஈடுபட்டவர் கொலை...

1 hour ago 15

Last Updated:Mar 10, 2026 4:25 PM IST

சென்னை அம்பத்தூரில் இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்து ரவுடிஷத்தில் ஈடுபட்டு வந்தவரை, ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக்கட்டியதன் பின்னணி என்ன?

சென்னை கொலை
சென்னை கொலை

சென்னை அம்பத்தூரில் கொலை குற்றவாளியை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. சாவுக்கும், சண்டைக்கும் அஞ்சாதவன் என இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்து ரவுடிஷத்தில் ஈடுபட்டு வந்தவரை, ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக்கட்டியதன் பின்னணி என்ன?

சென்னை அம்பத்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் இலியா சாமுவேல். 21 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், அவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்த அவர், அவ்வப்போது அட்ராசிட்டியில் ஈடுபட்டு பலரையும் அச்சுறுத்தி வந்ததாக தெரிகிறது. ஏரியாவில் "அடுத்த தாதா நான்தான்" என்ற தோரணையில், பலரையும் மிரட்டி ரவுடியிசத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. அப்படி அவர் செய்த சம்பவம், இறுதியில் கொடூரமாக காவு வாங்கியுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் தேதி, சாமுவேல் தனது நண்பர்களுடன் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பெரியசாமி, பரத், சந்தோஷ் ஆகிய 3 இளைஞர்களிடம், இலியா சாமுவேல் வீண் தகராறு செய்து அவர்களை தாக்கி சீன் போட்டுள்ளார். மேலும், அன்றிரவே "சாவுக்கும் சண்டைக்கும் அஞ்சாதவன்" என இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்து கெத்தாக இருந்துள்ளார். ஏற்கனவே தங்களை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த மூவருக்கும், சாமுவேலின் இன்ஸ்டா ஸ்டேட்டஸ் கொலை வெறியை தூண்டியது.

அதில் "இலியா சாமுவேலை சம்பவம் செய்தால்தான் அடங்குவான்" என சபதம் எடுத்து, மூவரும் பட்டாக்கத்தியை கையில் எடுத்துள்ளனர். வீட்டின் அருகே சுற்றித் திரிந்த சாமுவேலை மூவரும் சுற்றி வளைத்துள்ளனர். உயிர் பயத்தில் தப்பிக்க நினைத்து ஓடிய சாமுவேலை விடாது துரத்திய கும்பல், வாட்டர் கேன் கடை அருகே வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

அம்பத்தூரை அலறவிட்ட இச்சம்பவத்தில், கொலை வழக்குப் பதிந்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட பெரியசாமி, பரத், சந்தோஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மறுபுறம் கொலை செய்யப்பட்ட சாமுவேலின் உடல் அம்பத்தூர் சண்முகபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற்றன. அங்கு போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

"பூமிக்கு அடியில் இடம் பிடிக்க; பூமிக்கு மேல் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கை...!" என சர்ச்சையான வசனங்களை அச்சடித்து மீண்டும் பீதியை கிளப்பி உள்ளனர்.

இதனால் மீண்டும் "பழிக்கு பழி; கொலைக்குக் கொலை" என நடக்காதவாறு, ஆவடி மாநகர காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏரியா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ "கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு" என்பதை சாமுவேலின் மரணம் உண்மையாக்கி உள்ளது.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

பழிக்குப்பழி வசனத்துடன் பேனர் வைத்து அச்சுறுத்தல்... இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்து ரவுடிஷத்தில் ஈடுபட்டவர் கொலை...

Read Entire Article