பா.ஜ.க. ஆளும் அசாமில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஆனால், தேர்தலுக்கு முன் பணம்!

1 hour ago 19

பிரியங்கா காந்தி

குவஹாத்தி, பிப்.22– அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாமுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரியங்கா காந்தி, குவஹாத்தியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு 19.2.2026 அன்று உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

“அசாமில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறதா? பாஜக அரசு எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தேர்தலுக்கு முன்பாக பெண்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆனால், ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதா? குற்றம் தான் அதிகரித்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது? எத்தனை பெண்கள் அவர்களின் சொந்த கால்களில் நிற்க உதவி வழங்கப்பட்டது?

மக்களின் கைகளில் உள்ள அனைத்து செல்வங்களும் இந்த மாநிலத்தை ஆளும் ஒரு குடும்பத்தின் கைகளுக்குச் செல்கின்றன” எனத் தெரிவித்தார்.

முன்னதாக அசாம் பாஜக அரசுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய “மக்கள் குற்றப்பத்திரிகை”யை பிரியங்கா காந்தி வெளியிட்டார்.

அசாம் மக்களின் பூர்வீக நிலங்களை பெரு நிறுவனங்களுக்கு அளித்ததாகவும், பொருளாதார முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வாய்ப்பு!”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் கருத்து!

சென்னை, பிப்.22- “மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் 20.2.2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “அய்ந்தாண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக நிறைவு பெற்றிருக்கிறது. அதனால் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழ்நாடு மக்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதை அவர் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.

பின்னர் அவர், “அது பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் நிலை, திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிற்கே வழி பிறந்திருக்கிறது” என்றும் ஓபிஎஸ் கூறினார்.

மூடநம்பிக்கையின் உச்சம்!

‘பேய்’ ஓட்டுவதாகக் கூறி கொடூரம்!

2 மாதக் குழந்தையுடன்
தாய் எரித்துக் கொலை

சாய்பசா, பிப். 22– ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாந்திரீகம் செய்வதாகக் கூறி, இரண்டு மாதக் கைக்குழந்தையுடன் இளம்பெண்ணை கிராம மக்கள் தீவைத்துக் கொளுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேய் ஓட்டுவதாகக் கூறி கொடூரம்!

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம், சாய்பசா கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்ஹன் சிங்கு (40). இவருக்கு ஜனி சிங்கு மற்றும் ஜோதி சிங்கு (32) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் இரண்டாவது மனைவி ஜோதி சிங்குவுக்கு இரண்டு வயதில் ஒரு மகனும், இரண்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

ஜோதி சிங்கு மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாகக் குற்றம் சாட்டி வந்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி இரவு, கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொல்ஹன் சிங்குவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். கிராமத்தில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்ததற்கு ஜோதி சிங்கு செய்த மாந்திரீகமே காரணம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை ஜோதி சிங்கு மற்றும் அவரது 2 மாதக் குழந்தை மீது ஊற்றித் தீ வைத்தனர். இதில் தாயும் சேயும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கொல்ஹன் சிங்கு மீதும் தீ வைக்கப்பட்ட நிலையில், அவர் லேசான காயங்களுடன் தப்பி ஓடினார். இரவு நேரத்தில் காவல் நிலையம் மூடியிருந்ததால், விடிய விடிய அங்கேயே காத்திருந்து அதிகாலையில் புகார் அளித்தார்.புகாரைப் பெற்ற காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

“மூடநம்பிக்கையின் உச்சமாக, மாந்திரீகம் செய்வதாகப் பழிசுமத்தி ஒரு தாயையும் குழந்தையையும் உயிரோடு எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.”

Read Entire Article