Last Updated:October 13, 2025 2:36 PM IST
விசிக எம்பி ரவிக்குமார், விஜய் பாஜக அரசியல் நாடகத்தில் நடிக்கும் நடிகர் என விமர்சித்துள்ளார்.
“நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம். பாஜகவினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய்” என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கொடுத்துள்ள உச்சநீதிமன்றம், சிபிஐக்கு வழக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, விசிக எம்பி ரவிக்குமார், “விஜய் தரப்பின் மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பாஜகவின் பிடியில் விஜய் சிக்கிக்கொண்டுவிட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம்.
எம்.பி. ரவிக்குமார்
திமுகவுக்குச் செல்லும் சுமார் 14% மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய்.
பாஜகவை கொள்கை எதிரி என்பதும், திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும்; காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பதுபோன்றத் தோற்றத்தை ஏற்படுத்துவதும் ( இதற்குக் காங்கிரஸ் மேலிடத்தில் சிலர் இடமளிப்பது வேதனையானது) சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள்.
பாஜக அணியில் அவர் சேர்ந்துவிட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய்விடும். அதுமட்டுமின்றி அதிமுக வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பாஜக- விஜய் நோக்கமும் தோற்றுவிடும். எனவே, பாஜக அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பாஜக திட்டமிடும் எனக் கருதுகிறேன்.
பாஜகவினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 2:36 PM IST
“பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்” – விசிக எம்பி ரவிக்குமார் கடும் விமர்சனம்