புதிய ஆளில்லா வானூர்தியைக் கூடிய விரைவில் உள்துறைக் குழு பயன்படுத்தக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உள்துறைக் குழு அமைப்புகள், கூடிய விரைவில் ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் பறக்கும் ஆளில்லா வானூர்திகளைத் துரத்தி, அவற்றைப் பிடிக்கக்கூடிய அதிவேக ஆளில்லா வானூர்திகளைக் கொண்டிருக்கும்.
பிற ஆளில்லா வானூர்திகளை இடைமறிக்கக்கூடிய அது அனைத்துலக நிலைப்பாட்டுக் கட்டமைப்பின்றி உலக நாடுகளில் செயல்படும் முதல் ஆளில்லா வானூர்தி.
தற்போதுள்ள ஆளில்லா வானூர்திகளுக்குப் பிற ஆளில்லா வானூர்திகளின் அலைவரிசை தொலைத்தொடர்பைத் தடுக்கக்கூடிய ஆற்றல் மட்டுமே உள்ளது.
“ஆனாலும், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட ஆளில்லா வானூர்திகள் அதே இடத்தில் பறக்கலாம் அல்லது திடீரென கீழே விழலாம். ஒருவேளை அதில் அபாயகரமான பொருள்கள் இருந்தால் ஆபத்தாக முடியலாம்,” என்று உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (எச்டிஎக்ஸ்) தெரிவித்தது.
சிங்கப்பூர் போன்ற நெருக்கமான நகர்ப்புற சூழலில் அது இன்னும் பெரிய சவாலாக இருக்கும் என்ற அமைப்பு, கூட்டமான இடங்களில், உயரமான கட்டடங்களில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவது இன்னும் சிரமமாகலாம் என்றது.
எச்டிஎக்ஸ் அமைப்பின் வருடாந்தர ‘டெக்எக்ஸ்புளோர்’ கண்காட்சியில் புதிய ஆளில்லா வானூர்தி காட்சிக்கு வைக்கப்பட்ட 20 புத்தாக்கத் தொழில்நுட்பக் கருவிகளில் ஒன்று.
இவ்வாண்டு கண்காட்சி கராஜ்@எச்டிஎக்ஸ் ஜூரோங்கில் இடம்பெற்றது. பொதுப் பாதுகாப்பை முன்னிட்டு சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் சோதனை, மதிப்பீட்டுத் தளம் அது.
சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் புதிய இடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
அதில் ஆளில்லா வானூர்திகள், வாகனங்கள், தொலைத்தொடர்புக் கட்டமைப்புகள் ஆகியவற்றை செயல்படுத்துமுன் எச்டிஎக்ஸ் சோதித்துப் பார்த்து மதிப்பீடு செய்யும்.
புதிய ஆளில்லா வானூர்தியுடன் செயற்கை நுண்ணறிவு ஆற்றலுடன் கடலுக்கடியில் தேடல் பணியில் ஈடுபடக்கூடிய இயந்திரமும் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய கருவி நீருக்கடியில் உள்ள அபாயங்களைக் குறிவைத்து, அதைத் தீவிரமாகச் சோதனை செய்யும். அது தரும் தகவல்களைக் கொண்டு முக்குளிப்பாளர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பர்.