பிலிப்பைன்ஸ் கப்பல் மீது மோதி அச்சுறுத்திய சீன கடற்படை தென் சீனக்கடலில் பதற்றம்

13 hours ago 13

பீஜிங், அக்.13-  தென் சீனக்கடல் வழியாக ஆண்டுதோறும் சுமார் 3 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக போக்குவரத்து நிகழ்கிறது. இந்த முக்கியமான கடல் பகுதி முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரத் துடிக்கிறது. அதே சமயம் புருனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் இந்த நீர்வழித்தடத்தின் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன.

இந்த சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் டிட்டு தீவு அமைந்துள்ளது. இந்த தீவு பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே சமயம், தென் சீனக்கடலைப் போல், இந்த தீவுப்பகுதிக்கும் சீன அரசு உரிமை கோரி வருகிறது. இரு நாடுகளின் கடற்படையினரும் அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்த முயன்று வருவதால், அது மிகவும் பதற்றமான பிராந்தியமாக அறியப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (12.10.2025) டிட்டு தீவுப் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் மீது சீன கடற்படை கப்பல் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அச்சுறுத்தியதாகவும், பின்னர் கப்பலின் மீது வேண்டுமென்றே மோதியதாகவும் பிலிப்பைன்ஸ் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான காணொலிப் பதிவையும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் தென் சீனக்கடல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், இந்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து சீன கடற்படை வெளி யிட்டுள்ள விளக்கத்தில், பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாண்டிகே கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், பின்னர் வேண்டும்மென்றே சீன கப்பல் மீது மோதியதாகவும் குற்றம்சாட்டப் பட்டுள்ளது. சீனாவின் இந்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சீன கடற்படையின் செயல் ஆபத்தானது மற்றும் மூர்க்கத்தனமானது என கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article