பீகாரிலும் தந்தை பெரியார்!

1 hour ago 13

பீகாரைச் சேர்ந்த உயர்நிலையில் பணிபுரியும் மணமக்கள் அனந்த்குமார், சிகாரஞ்சன். இவர்கள் தங்களது திருமண விழாவில் பார்ப்பனப் புரோகிதச் சடங்குகளைப் பகிரங்கமாக மறுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் புத்தரின் நெறிப்படி மாலை மாற்றிக் கொண்ட நிகழ்வு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமண விழா கோலாகலமாகத் தொடங்கியபோது, மணமேடைக்கு வந்த புரோகிதர் சடங்குகளைத் தொடங்கினார். அவர் அக்னி வளர்த்து (தீ மூட்டி) மணமக்களை வலம் வருமாறு அழைத்தபோது, மணமக்கள் இருவரும் அதனை ஏற்க மறுத்தனர். தாங்கள் புரோகித முறைப்படி திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதை மேடையிலேயே அறிவித்து அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

இந்த முடிவு குறித்து மணமகள் கூறும்போது: “பல்கலைக்கழகங்களில் நிலவும் ஜாதியப் பாகுபாடுகளைக் களைய பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த புதிய விதிமுறைகளை எதிர்த்து, அண்மையில் பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினர். பல ஆண்டுகளாக ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களைப் பாதுகாக்கும் ஒரு சட்டத்தையே அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் அவர்களின் சாஸ்திர சம்பிரதாயங்களே காரணம்! அந்தச் சடங்குகள் தான் அவர்களின் மூளையில் ஜாதிய நெருப்பை வளர்க்கின்றன. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே புரோகித முறையை நாங்கள் நிராகரித்தோம். வந்திருந்த புரோகிதர் மீது எங்களுக்குத் தனிப்பட்ட வெறுப்பு எதுவுமில்லை. அவர் எங்கள் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று வந்தவர், எனவே அவரையும் ஒரு விருந்தினராகவே கருதுகிறோம்,” எனத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து மணமகன் பேசுகையில், “எங்கள் எதிர்ப்பைப் பொது மேடையில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இது குறித்து முன்னரே வீட்டாரிடமும் கூறவில்லை. புத்தரின் நெறி உலக மக்கள் அனைவருக்குமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டமே எங்களின் வேதம்! எனவே, இவை இரண்டையும் சாட்சியாக வைத்து மாலை மாற்றிக்கொண்டோம்,” என்றார்.

மாலை மாற்றிக் கொண்ட கையோடு, அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலையில் தங்களது திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். சடங்குகளைப் புறக்கணித்து சமத்துவத்தையும், சட்டத்தையும் போற்றிய இந்த இளம் அதிகாரிகளின் திருமணக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் அதி வேகமாய்ப் பரவி வருகிறது. பலரும் இவர்களின் துணிச்சலான முடிவைப் பாராட்டி வருகின்றனர்.

பரவாயில்லை – ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் கொள்கைகள் இப்பொழுது பீகாரிலும் வேர்ப் பிடித்திருக்கிறது என்று நினைக்கும்போது நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சித் தேனில் மிதக்கிறது.

கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக்குமுன் 1928 மே 28ஆம் தேதி அருப்புக்கோட்டையை அடுத்த சுக்கில நத்தத்தில் தந்தை பெரியார் புரோகிதமற்ற முதல் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார்.

தொடக்கத்தில் எவ்வளவோ எதிர்ப்புகள் இருந்தன என்றாலும் – அவற்றையெல்லாம் கடந்து அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான நிலையில் இதற்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது (செயல்பாட்டுக்கு வந்த நாள் 20.1.1968 அரசமைப்புச் சட்டம் எண் 21/1967 – Hindu Marriage Tamilnadu Amendment Act).

இறுதியில் சிரிப்பவன் யார் என்பதே முக்கியம்! அந்த வகையில் இடையில் எவ்வளவோ இடர்ப்பாடுகளும் எதிர்ப்புகளும் வந்தாலும் வெற்றிமாலை தந்தை பெரியாரின் தோளில்தான் விழுந்தது என்பது நினைவிருக்கட்டும்!

இன்று தமிழ்நாட்டையும் கடந்து புதுச்சேரி, சிங்கப்பூர், மலேயாவிலும் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பழமைப் பாசி படர்ந்த பீகாரிலே புரோகித மறுப்புத் திருமணம் நடைபெற்றுள்ளது என்றால், அது தந்தை பெரியாருக்கும், அவர்தம் கொள்கைக்கும் கிடைத்திட்ட மாபெரும் வெற்றியாகும்.

தஞ்சையில் நடைபெற்ற (21.2.2026) திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநாட்டில் இந்தியா முழுவதும் சுயமரியாதைத் திருமணம் செல்லத்தக்க வகையில் ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்திற்கு முதல் அடியை – தொடக்கத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறது பீகாரில் நடைபெற்ற புரோகித மறுப்புத் திருமணம்.

மண மக்களுக்கு வாழ்த்துகள்!

Read Entire Article