பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முடிவு? பல்வேறு சாக்குப் போக்குச் சொல்லும் பிரதமர் மோடியின்மீது பொருளாதார வல்லுநர்கள் குற்றச்சாட்டு

1 hour ago 16

புதுடில்லி, மே 13 நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியால்தான் பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட வேண்டி உள்ளது என்று பல்வேறு சாக்கு போக்குகளை மோடி கூறி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேற்கு ஆசிய போர்ச் சூழல் மோச மாகி வருவதால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த நெருக்கடிக்கு ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமையிலான மோடி அரசு மாற்று வழிகளை தேடாமல், அதானி – அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கூட்டாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க, மக்கள் தலையில் விலைவாசி உயர்வை சுமத்த மோடி அரசு முயற்சித்து வருகிறது. இது கடந்த மார்ச் மாதமே நாட்டு மக்களுக்குத் தெரியும். பிரதமர் மோடி அப்போதே கரோனா போல எதையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருங்கள் என கூறினார். மேலும் நாட்டில் ஊர டங்குக்கு வாய்ப்பு என செய்திகளும் வெளியாயின. எனினும் இது போலி என ஒன்றிய அமைச்சர்கள் மறுப்புத் தெரிவித்தனர். அதே போல 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால், மோடி அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையை ஏற்றாமல் வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டும் கிளம்பியது.

போராட்டம்

தேர்தல் நடக்கும் சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் மோடி பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்துவார் என குற்றம்சாட்டின. எதிர்பார்த்தது போலவே, சமையல் எரிவாயு விலையை மட்டும் பிரதமர் மோடி உயர்த்தினார். இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அடுத்து பெட்ரோல், டீசல் விலையையும் மோடி மிக மோசமான அளவில் உயர்த்த கணக்குப் போட்டிருந்த சூழலில், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து, நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றும் முடிவை மோடி அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன், “பொது மக்கள் பெட்ரோல், டீசலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டும். ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” என திடீர் அறி விப்பை வெளியிட்டு, நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.

மீண்டும், மீண்டும்

தொடர்ந்து நேற்று (12.5.2026) குஜராத் மாநிலம் வதோதராவில், ‘‘சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவது குஜராத்தின் கலாச்சாரமாகும். தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் இந்த தசாப்தத்தின் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். இதன் பாதிப்பு மக்கள் மீது மிகக்குறைவாக இருப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு இடைவிடாத முயற்சிகளை எடுத்து வருகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்து, பொது போக்குவரத்து மற்றும் மின்சாரப் பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். அரசு, தனியார் அலுவலகங்களில் ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை ஊக்கு விக்க வேண்டும். தங்கம் இறக்குமதி செய்வதற்காக நம்முடைய லட்சக்கணக்கான கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு செல்வதால், நிலைமை சீராகும் வரை தங்கம் வாங்குவதை தள்ளிப்போட வேண்டும்” என மீண்டும் அறிவுரை கூறினார்.

ரூ.150

மோடி தொடர்ந்து இவ்வாறு பேசி வருவதன் நோக்கம் நாட்டு மக்களுக்கான அறிவுரை அல்ல. வேறு ஒரு சூழ்ச்சி உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவே மோடி நாள்தோறும் இவ்வாறு பொதுமக்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். இந்த அறிவுரைக்குப் பின், 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் எதிர்க்கட்சிகளின் கணிப்பிற்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை; நாட்டின் நெருக்கடியே காரணம் என்று உணர்த்தவே நாள் தோறும் பல்வேறு சாக்குப் போக்குகளை, வாய்மொழி கட்டுப்பாடுகளை மோடி விதித்து வருகிறார்” என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது மோடி அரசின் திட்டத் தின்படி பெட்ரோல் ரூ.130 முதல் ரூ.160 வரையிலும், டீசல் ரூ.120 முதல் ரூ.135 வரையிலும், சமையல் எரிவாயு விலை ரூ.2,000–க்கு மேல் உயர வாய்ப்புள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்ட அறிவுரை ஒரு சில கட்டுப்பாடுகள் மூலம் இதனை செயல்படுத்த மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article