Last Updated:May 15, 2026 8:29 PM IST
"இந்தியா கூட்டாட்சி நாடு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதி பெற்று மக்கள் நலத்திட்டங்கள் செய்வோம்" என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது. இதனையடுத்து காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைந்தது.
அதேசமயம், திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐ.யு.எம்.எல். ஆகியவை நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தன. இதன் அடிப்படையில், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். அதனை ஏற்ற ஆளுநர் அர்லேகர் அழைப்புவிடுத்தார். இதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி பொறுப்பேற்றது. இதில், விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதேபோல், செங்கோட்டையன், அருண்ராஜ் உட்பட 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இதன் பிறகு அதிமுகவில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி குழு தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் நேரில் சந்தித்தார். இதன் பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு, அதிமுக அதிருப்தி குழு எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தவெக நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
13ஆம் தேதியோடு சட்டப்பேரவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தவெக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்றனர். அதன்படி, தவெக அமைச்சர் அருண்ராஜ் தனது தொகுதியான திருச்செங்கோடுக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேசமயம், கொள்கை ரீதியான மாநில உரிமைகளைச் சார்ந்த முடிவுகளில் தவெக முதல் கட்சியாக குரல் கொடுத்து போராடும். அதுதவிர இந்தியா என்பது கூட்டாட்சி நாடு. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதியைப் பெற்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
.png)







English (US) ·