'மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்' - திமுக கூட்டணி சார்பில் 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

22 hours ago 15

Last Updated:Feb 07, 2026 12:15 PM IST

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, அதிமுக ஆதரவு குறித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 12.02.2026 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் அதிமுகவைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து அக்கூட்டணிக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்குத் தரப்பட வேண்டிய கல்வி நிதி ரூ.3,458 கோடி, நூறு நாள் வேலைத் திட்ட நிதி ரூ.2,000 கோடி மற்றும் குடிநீர் இணைப்புத் திட்ட நிதி ரூ.3,112 கோடி என எதையுமே விடுவிக்காமல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காமல் வஞ்சிக்கும் பாஜக அரசை ஆதரித்து, தமிழக உரிமைகளை அதிமுக அடகு வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் வகையிலான சட்டங்களைக் கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசு, மறுபுறம் அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் மூலம் அந்நாட்டு விவசாயப் பொருட்களை இங்கே இறக்குமதி செய்ய வழிவகை செய்துள்ளது. இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல் என்றும், நூறு நாள் வேலை ஒழிப்பு மற்றும் விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என ஒரே நேரத்தில் கிராமப்புற மக்கள் மீது பாஜக அரசு இரட்டை அணுகுண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மக்கள் விரோதச் செயல்களுக்கு அதிமுக உறுதுணையாக இருந்து தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, புதிய சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து வீழ்ச்சியில் தள்ளத் துடிக்கும் பாஜக அரசையும், அதோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்கத் துடிக்கும் அதிமுகவையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வரும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும், கழக ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் அளவிலும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

Feb 07, 2026 12:15 PM IST

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

'மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்' - திமுக கூட்டணி சார்பில் 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

Read Entire Article