மனித நூல்களாக மனநல நிபுணர்கள்

1 hour ago 8

சிங்கப்பூரில் மனநலம் சார்ந்த கவலைகள் அதிகரிக்கும் நிலையில் அவற்றைக் கையாளும் வழிகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

மனநலத் துறையிலுள்ள பல்வேறு வேலைகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், தமிழர் பேரவை மே 9ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மனித நூலகம்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘மென்டல் ஆக்ட்’ (Mental ACT) அமைப்பும் ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லமும் அந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தன.

மனநலத் துறையில் பணிபுரியும் அறுவர் அந்நிகழ்ச்சியில் 'மனிதப் புத்தகங்களாகத்’ தங்கள் பணியிட அனுபவங்களையும் அறிவுரைகளையும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.

கிட்டத்தட்ட 40 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருத்தரங்கு வடிவிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில், மனநலம், சமூகச் சேவை சார்ந்து, கம்போங் கபூர் சமூகச் சேவை மையத்தின் தலைவர் பவானி பிள்ளை, மனநல ஆலோசகரும் ‘மென்டல் ஆக்ட்’ அமைப்பை இணைந்து தோற்றுவித்தவருமான பிரிய நிஷா, மருத்துவ உளவியலாளரும் இணைப் பேராசிரியருமான வித்யா முத்துகுமார் ஆகியோர் பேசினர்.

“மனநலம் குறித்த விழிப்புணர்வு தமிழ்ச் சமுதாயத்தில் குறைவாகவே உள்ளது. மனநலக் குறைபாடுகளைப் பெரும்பாலோர் புறக்கணிப்பதோடு, தம் மனநலத்தைப் பேண நேரம் ஒதுக்குவதில்லை,” என்ற கருத்தைக் கலந்துரையாடலில் முன்வைத்தார் திருவாட்டி வித்யா.

“மனநலம் சார்ந்த துறையில் பணிபுரிய விரும்புவோர் இத்துறையின் எதார்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு உதவுமுன் தாங்கள் சோர்வடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்று இத்துறை பற்றி எடுத்துரைத்தார் திருமதி பவானி பிள்ளை.

நிகழ்ச்சியின் இரண்டாவது அங்கத்தில், பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு பேச்சாளருடனும் உரையாட நேரம் கொடுக்கப்பட்டது. குழுக்களாகப் பேச்சாளர்களுடன் ஆழமான உரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள் இத்துறை பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 24 வயதான விஷாலினி செங்குட்டுவன் தம் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “இணையம் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும், நேரடியாக இந்தத் துறையில் இருப்பவர்களுடன் பழகுவதும், அவர்களது அனுபவங்களைக் கேட்பதும் மாணவர்களுக்கு மனநலத்துறையின் எதார்த்தங்களைத் தெளிவாகப் புரியவைக்கும்,” என்று அவர் கூறினார்.

“மனநலத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளையும் சவால்களையும் பற்றி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் வேலை மாற விரும்புவோர் வரை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கியக் குறிக்கோள்,” என்று இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் வெள்ளிநிலா குணாளன் கூறினார்.

Read Entire Article