அன்னையர் தின விழா: நட்சத்திர தம்பதிகள் பங்கேற்பு

1 hour ago 12

ab1d6e5f-b2c0-4d29-9cd0-1214a8f2d22a

அன்னையருடன் திருமதி ராதிகா சரத்குமார் (நடுவில்). - படம்: சிங்கப்பூர் இந்தியர் சங்கம்

அன்னையர் தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் இந்தியர் சங்க ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10), அன்னையரைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்த் திரையுலக நட்சத்திரத் தம்பதியர் சரத்குமார், ராதிகா சரத்குமார் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர்.

அன்னையர், அவர்களது குடும்பத்தினர் என 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தக் கொண்டாட்டத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

‘ராயல் இல்யூஷன்ஸ்’ குழுவினரின் கண்கவர் நடனமும், இனிமையான இசை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. விழாவின் ஒரு பகுதியாக, அன்னையர் ஐவருக்குத் திருமதி ராதிகா சரத்குமார் மகுடம் சூட்டி, விருது வழங்கிக் கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமாரிடமிருந்து விருது பெற்ற அன்னை சரோஜா (வலமிருந்து இரண்டாமவர்), அவரது மகள் நீலாம்பிகை (வலது).

நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமாரிடமிருந்து விருது பெற்ற அன்னை சரோஜா (வலமிருந்து இரண்டாமவர்), அவரது மகள் நீலாம்பிகை (வலது). - படம்: ஆயிஷா ரோஸ்

திருவாட்டி சரோஜா, விருது வாங்கிய அன்னையரில் ஒருவர். அவர் தம் மகள் நீலாம்பிகையுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“என் தாயார் தமது வாழ்வில் சந்தித்த பல போராட்டங்களையும், சவால்களையும் இந்த மேடையில் நான் எடுத்துக்கூறினேன். என் தாயாருக்கு இந்த விருது வழங்கப்பட்டு, அவர் கௌரவிக்கப்பட்டிருப்பது எங்களுக்குப் பெருமிதம் அளிக்கிறது. இந்த இனிய தருணத்தை அவருடன் இணைந்து கொண்டாடுவதில் எனக்கு மகிழ்ச்சி,” என்று நீலாம்பிகை கூறினார்.

திரு சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமாருடன் கலந்துரையாடல்.

திரு சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமாருடன் கலந்துரையாடல். - படம்: சிங்கப்பூர் இந்தியர் சங்கம்

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, நட்சத்திரங்களுடனான கலந்துரையாடல் அமைந்தது. இந்த அங்கத்தைத் திருவாட்டி பச்சன் கோர் தொகுத்து வழங்கினார்.

அதில் பேசிய திருமதி ராதிகா சரத்குமார், “அன்னையர் எதற்கும் குற்ற உணர்வு கொள்ளாமல், தங்கள் மனநலத்திலும் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

கலந்துரையாடலில் பேசிய திரு சரத்குமார், “குழந்தைப் பருவத்தில் நம் அளவிலாக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, நம்மைப் பார்த்துக்கொண்டவர்கள் பெற்றோர். வயதான காலத்தில் குழந்தைகளாக மாறும் பெற்றோரை நாம் கைவிடாமல் அன்புடன் அரவணைக்க வேண்டும்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அன்பும் நெகிழ்ச்சியும் அரங்கத்தில் நிறைந்திருந்த இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சி, பங்கேற்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் நினைவில் நிற்கும் அனுபவமாக அமைந்தது.

Read Entire Article