மராட்டிய மாநிலம் – புனே நகரிலிருந்து மகாத்மா ஜோதிபா பூலே பற்றாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடினர்

1 hour ago 11

சென்னை, மே 9- மராட்டிய மாநிலம், புனே நகரிலிருந்து மகாத்மா ஜோதிபா பூலே கொள்கைப் பற்றாளர்கள் சென்னை – பெரியார் திடலுக்குக் குடும்பமாக வருகை தந்திருந்தனர். 8.5.2026 அன்று வருகை தந்த வழக்குரைஞர் முனைவர் தொண்டிபா சங்கர்ராவ் கோரே மற்றும் ராம்நாத் பாஸ்கர்ராவ் உகாலே குடும்பத்தினர் சென்னை பெரியார் திடலைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவரை பெரியார் அருங்காட்சியகத்தில் சந்தித்து உரையாடினர்.

ஆசிரியரைச் சந்தித்த பூலே பற்றாளர் களுக்கு தந்தை பெரியாரின் இயக்கத்தைப் பற்றிய செய்திகள், தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட சாதனைகள் – குறிப்பாக சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

மராட்டிய மாநிலத்தில் மகாத்மா ஜோதிபா பூலேவின் அரும் பணியால் முளைத்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தாக்கத்தினால் அன்றைய தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட நிலைமைகளை விளக்கினார்.

மராட்டிய மாநிலம் புனே நகரிலிருந்து சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த வழக்குரைஞர் முனைவர் தொண்டிபா சங்கர்ராவ் கோரே மற்றும் ராம்நாத் பாஸ்கர்ராவ் உகாலே குடும்பத்தினர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்துப் பெரியார் இயக்கம் பற்றி உரையாடினர். (8.5.2026)

வருகை தந்தோரிடம் மகாத்மா பூலே அவர்களின் 200ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக திராவிடர் கழகம் கொண்டாட உள்ள நிலைமைகளைக் கூறினார். செய்திகளை அறிந்து கொள்ள வருகை வந்திருந்த பற்றாளர்கள், தாங்களும் ஜோதிபா பூலே அவர்களின் பிறந்த நாளை 200 கிராமங்களில் விழாவாகக் கொண்டாடி உள்ள செயல் தொழிலாளர்கள் திட்டத்தினைத் தமிழர் தலைவரிடம் தெரிவித்தனர்.

மேலும் கல்வியின் மேன்மை குறித்து விளக்கிட 200 பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தி வருவதையும் எடுத்துரைத்தனர். மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் கொள்ளுப் பேத்தி நீத்தாபால் பூலே, தமிழ்நாட்டில் திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

வருகை தந்த பற்றாளர்களில் வழக்குரைஞர் தொண்டியா சங்கர் ராவ் கோரே ஒரு மராட்டிய எழுத்தாளராவார். தந்தை பெரியாரின் கொள்கைகளை மராட்டிய மொழியில் மாற்றம் செய்திட தன் விருப்பத்தினையும் தெரிவித்தார்.

திராவிடர் கழகம்

பெரியார் திடலுக்கு வருகை தந்த மகாத்மா ஜோதிபா பூலே பற்றாளர்களுக்குத் தந்தை பெரியாரின் உருவச் சிலையினை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழங்கினார். (8.5.2026)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு வேண்டுதல் கடிதம் அனுப்பி அனுமதி பெற்று மொழியாக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டார். தாங்கள் திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட அணியமாக உள்ளதை மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர்.

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் தந்தை பெரியார் கொள்கை பரப்புரை செய்து வருவதை அறிந்து, “அவர்களுடனும் நாங்கள் தொடர்பில் இருப்போம்” என தெரிவித்தனர்.

பூலே பற்றாளர்கள் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களைச் சந்தித்தும் உரையாடினர். வருகை தந்தோருக்கு தந்தை பெரியாரின் உருவச் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

பெரியார் புத்தக நிலையத்தினைப் பார்வையிட்டு தந்தை பெரியாரின் கொள்கை சார்ந்த ஆங்கிலப் புத்தகத்தை வாங்கிச் சென்றனர். தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தின் மராட்டிய மொழியில் மாற்றம் செய்திட உள்ள விருப்பத்தினையும் தெரிவித்துச் சென்றனர்.

தந்தை பெரியார் மற்றும் அவர் நிறுவிய இயக்கம் பற்றி  சிறிது கேள்விப்பட்டு இருந்த பூலே பற்றாளர்கள் சென்னை – பெரியார் திடலுக்கு நேரில் வந்திருந்து இயக்கம் பற்றி தமிழர் தலைவரிடம் கலந்து உறவாடி மேலும் அரிய தகவல்களை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் விடை பெற்றனர். பூலே பற்றாளர்களுக்கு பெரியார் திடலைப் பற்றிய செய்திகளைச் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் எடுத்துரைத்தார். தோழர் முரளி கிருஷ்ணன் உடன் இருந்தார்.

Read Entire Article