மழைப்பொழிவு குறைவு.. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுப்பு!

13 hours ago 10

Last Updated:Jul 22, 2026 9:47 PM IST

காவிரி நீர்: மழைப்பொழிவு குறைவால் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு. டெல்லியில் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதம். ஒரு வாரம் கண்காணித்து, ஜூலை 28 அன்று இறுதி முடிவு.

கோப்பு படம்
கோப்பு படம்

மழைப்பொழிவு குறைந்ததை காரணம் காட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் 53ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஆணையத் தலைவர் S.K. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை பெற்று தர ஆணையத்தை வலியுறுத்தினர்.

ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு 28 புள்ளி 337 TMC தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட சத்யபிரதா சாஹூ, ஆனால், வெறும் 3 புள்ளி 442 TMC மட்டுமே கிடைத்துள்ளதால் 24 புள்ளி 896 TMC தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜூலை 20 நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36.979 TMC ஆக இருப்பதாகவும், குடிநீர் தேவைக்காக மட்டுமே 1003 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், தங்கள் மாநிலத்தில் போதிய மழையின்மை மற்றும் வறட்சி நிலவுவதாகக் கூறிய கர்நாடக பிரதிநிதிகள், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் தேவைக்கு அதிகத் தண்ணீர் தேவைப்படுவதாகத் தெரிவித்தனர். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, தற்போதைய நிலவரத்தை மேலும் ஒரு வாரத்திற்கு உன்னிப்பாகக் கண்காணிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

வரும் 28ஆம் தேதி நடைபெறும் காவிரி ஒழுங்குமுறைக் குழு கூட்டத்தில், மாநிலங்களுக்கான விகிதாச்சாரப் பங்கு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article