தாம் உருவாக்கிய தமிழ் கற்றல் இணையத்தளத்துடன் கல்வியாளர் பி.எம்.ஏ. அமானுல்லாஹ், 62. - படம்: பி.எம்.ஏ.அமானுல்லாஹ்
சிங்கப்பூரில் மாணவர்கள் தமிழை எளிமையாகவும் ஆர்வத்துடனும் கற்கும் வகையில், ஒரு புதிய தமிழ் கற்றல் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 40 ஆண்டுகால கல்வி, கணினித்துறை அனுபவம் கொண்ட கல்வியாளர் பி.எம்.ஏ.அமானுல்லாஹ், 62, www.infocomonline.com/tamil எனும் அத்தளத்தை வடிவமைத்துள்ளார்.
இலவச தமிழ் கற்றல் இணையத்தளத்தின் ’கியூஆர்’ குறியீடு - படம்: பி.எம்.ஏ.அமானுல்லாஹ்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு இத்தளத்தின் அடிப்படைக் கட்டமைப்பைக் குறுகிய காலத்தில் உருவாக்க முடிந்தபோதும், இரு மாதங்களாகப் பிழைகளைச் சரிபார்த்து, கூடுதல் கவனம் செலுத்தி இந்தத் தமிழ் கற்றல் இணையத்தளத்தை வடிவமைத்துள்ளார் திரு அமானுல்லாஹ்.
வீட்டில் அனைவரும் தமிழில் பேசினாலும், பேரப்பிள்ளைகள் தமிழ் வீட்டுப்பாடம் செய்யும்போது சில எழுத்துகளைப் பயன்படுத்துவதில் சிரமப்படுவதைத் திரு அமானுல்லாஹ் கவனித்தார். அதற்கொரு தீர்வை அளித்து, தமிழ் கற்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இந்த இணையத்தளத்தை உருவாக்க அவரைத் தூண்டியது.
”தமிழ் எனது தாய்மொழி. ஒரு கல்வியாளராக மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற சிந்தனையில் பிறந்ததுதான் இந்தத் தமிழ் கற்றல் இணையத்தளம்,” என்று அவர் கூறினார்.
கணினி, திறன்பேசி போன்ற பல்வேறு மின்னணுக் கருவிகளில் தமிழ் கற்றல் தளத்தை எளிமையாகப் பயன்படுத்தலாம். - படம்: பி.எம்.ஏ.அமானுல்லாஹ்
இத்தளத்தில் தமிழ் எழுத்துப் பயிற்சி, சொற்களைப் படித்தல், ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பொருத்துதல், குறுக்கெழுத்துப் போட்டிகள் எனப் பல விளையாட்டுகள் உள்ளன. கணினி, திறன்பேசி போன்ற பல்வேறு மின்னணுக் கருவிகளில் இத்தளத்தை எளிமையாகப் பயன்படுத்தலாம். பெற்றோர் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, பிள்ளைகளின் கற்றல் முறைக்கு ஏற்ப அவர்களை வழிநடத்தலாம்.
அனைத்து வயதினரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இத்தளம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
“பிள்ளைகள் தமிழை விரும்பிப் படித்தால் அது கடினமாக இருக்காது. நூலகத்திற்குச் செல்லும்போது ஆங்கில நூல்களோடு சில தமிழ்க் கதைப் புத்தகங்களையும் பிள்ளைகளுக்கு எடுத்துத் தர வேண்டும்,” எனத் திரு அமானுல்லாஹ் அறிவுறுத்துகிறார்.
.png)





English (US) ·