20 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியில் சாதித்த ‘முன்மாதிரி ஊழியர்’

56 minutes ago 10

159cba1e-8314-46f5-8b6b-b59f385f01bc

2026 தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் மே தின ‘முன்மாதிரி ஊழியர்’ விருதைப் பெற்றுள்ளார் தேசிய நரம்பியல் கழக நோயாளி சேவைப் பிரிவு நிர்வாகி கிரேஸ் கிருஷ்ணன், 49. - படம்: தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ்

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வகுப்பறைக்குத் திரும்புவது பலருக்குக் கடினமான முடிவாகத் தோன்றலாம். ஆனால், 49 வயது திருவாட்டி கிரேஸ் கிருஷ்ணன் அந்தத் தயக்கங்களை உடைத்துச் சாதித்துக் காட்டியுள்ளார்.

சுகாதாரத் துறையில் தமது பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள அவருக்கு, 2026ஆம் ஆண்டுக்கான தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் மே தின ‘முன்மாதிரி ஊழியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது விடாமுயற்சி, வாழ்நாள் கற்றல் மீதான ஆர்வம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘என்’ நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற திருவாட்டி கிரேஸ், அதனையடுத்து நேரடியாக வேலைக்குச் சென்றார்.

ஆரம்பத்தில் சுகாதாரத் துறை சாராத வேலைகளில் பணிபுரிந்த அவர், புதிய வேலை தேடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக மருத்துவத் துறை வேலைவாய்ப்பைக் கண்டறிந்து, 2005ல் சுகாதாரத் துறையில் இணைந்தார்.

பலதுறை மருந்தகம் ஒன்றில் நோயாளி சேவைப் பணியாளர் ஒருவர், அழுதுகொண்டிருந்த நோயாளிக்கு அன்பாக ஆறுதல் கூறியதை நேரில் பார்த்தபோது தாமும் சுகாதாரத் துறையில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற ஆழமான ஆசை தமக்குள் விதைக்கப்பட்டதாகத் திருவாட்டி கிரேஸ் கூறினார்.

தற்போது தேசிய நரம்பியல் கழகத்தில் நோயாளி சேவைப் பிரிவு நிர்வாகியாகப் பணியாற்றும் அவர், 2022 அக்டோபரில் மீண்டும் கல்விப் பயணத்தைத் தொடங்கினார்.

சுகாதாரத் துறை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பகுதிநேரப் பட்டயப் படிப்பில் சேர்ந்தார். இந்தப் படிப்பிற்கான முழுச் செலவையும் அவர் பணிபுரியும் நிறுவனம் ஏற்றது.

அவர் படிக்கத் தொடங்கிய அதே காலகட்டத்தில், 25 வயதாகும் அவரது மூத்த மகள் சமூக மேம்பாட்டுத் துறையிலும் 23 வயதாகும் இளைய மகள் பாலர் பருவக் கல்வியிலும் பட்டயப் படிப்பை மேற்கொண்டு வந்தனர்.

மூவரும் இணைந்து படிக்கும் இடமாக வீட்டின் உணவு மேசை மாறியது. இணையத்தில் நம்பகமான தகவல்களைத் தேடவும், கணினி மென்பொருள்களைப் பயன்படுத்தவும் மகள்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்தனர்.

தமது மூத்த மகள் ஹரிணியின் பட்டமளிப்பு விழாவில் இளைய மகள் ஜனனி, கணவர் முருகன் கே. கோபால் ஆகியோருடன் திருவாட்டி கிரேஸ் கிருஷ்ணன்.

தமது மூத்த மகள் ஹரிணியின் பட்டமளிப்பு விழாவில் இளைய மகள் ஜனனி, கணவர் முருகன் கே. கோபால் ஆகியோருடன் திருவாட்டி கிரேஸ் கிருஷ்ணன். - படம்: கிரேஸ் கிருஷ்ணன்

பகல் முழுவதும் வேலை, இரவு 7 மணி முதல் 10 மணி வரை வகுப்பு என அவரது அன்றாட வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருந்தது. காலை 6.45 மணிக்கே வீட்டை விட்டுப் புறப்படும் அவர், மாலை 4 மணிக்கு வேலையை முடித்து வகுப்பிற்குச் செல்வார்.

இந்த நெருக்கடியான நேரங்களில், சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் அவரது கணவர் வீட்டு வேலைகளையும் சமையலையும் முழுமையாகப் பொறுப்பேற்றுப் பேருதவியாகத் துணைநின்றதாகத் திருவாட்டி கிரேஸ் கூறினார்.

தம்மைவிட மிகவும் இளைய மாணவர்களுடன் சேர்ந்து பயின்றபோது, தொடக்கத்தில் தயக்கமும் பயமும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சுற்றியிருந்த இளையர்கள் மடிக்கணினிகளில் அதிவேகமாகச் செயல்படுவதைப் பார்த்தபோது, தம்மால் ஈடுகொடுக்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.

இந்தத் தொழில்நுட்பச் சவால்களால் முதல் இரண்டு மாதங்களிலேயே படிப்பைக் கைவிட நினைத்ததாக அவர் கூறினார். ஆனால், விரிவுரையாளர்களின் ஊக்கமும், சக மாணவர்களின் உதவியும் அவரைத் தொடர்ந்து முன்னேறச் செய்தன.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அந்த இளம் மாணவர்களிடன் திருவாட்டி கிரேஸ் தமது பணி அனுபவங்களைப் பகிர்ந்தார். பதிலுக்கு அவர்கள் கணினித் தொழில்நுட்பத்தில் அவருக்கு உதவினர். அப்போது ஏற்பட்ட அந்தப் பிணைப்பு இப்போதும் தொடர்கிறது. மாதத்திற்கு ஒருமுறையாவது அவர்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தச் சந்திக்கின்றனர்.

2025 ஏப்ரலில் வெற்றிகரமாகப் பட்டயப் படிப்பை முடித்த திருவாட்டி கிரேஸ், இன்று 38 முதல் 40 பேர் கொண்ட நோயாளி சேவைப் பணியாளர்கள் குழுவை வழிநடத்துகிறார்.

49 வயது திருவாட்டி கிரேஸ் கிருஷ்ணன் 2025 ஏப்ரலில் தமது பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

49 வயது திருவாட்டி கிரேஸ் கிருஷ்ணன் 2025 ஏப்ரலில் தமது பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். - படம்: கிரேஸ் கிருஷ்ணன்

தேசியக் கட்டண முறை அமலாக்கத்திற்கு (National Billing System) ஆதரவளிப்பது முதல் தர மேம்பாட்டுத் திட்டங்களை வழிநடத்துவது, புதிய சேவைகளுக்கான செயல்முறைகளை உருவாக்குவது எனப் பல முக்கியப் பொறுப்புகளையும் அவர் திறம்படக் கையாளுகிறார். இந்தப் படிப்பின் மூலம் அவர் கற்றுக்கொண்ட சுகாதார உளவியல், துடிப்பான முதுமை சார்ந்த தகவல்கள், நோயாளிகளின் உடல்நலனுக்கு அப்பால் அவர்களின் மன, சமூக நல்வாழ்வைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுவதாக அவர் கூறினார்.

“படிப்புக்கும் கல்விக்கும் வயது தடையன்று. ஒருவர் தன்னை மேம்படுத்திக் கொள்வது வேலையில் உயர்வதற்காக மட்டுமல்லாமல் அவரவர் நலனுக்காகவும்தான். குடும்பத்தின் ஆதரவோடு செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்,” எனத் திருவாட்டி கிரேஸ் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறார்.

Read Entire Article