தமிழ்நாடு தேர்தல் களம் அனல் பறக்கத் தயாராகி வரும் சூழலில், வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக பணியாற்றி வருகின்றன. அதிலும், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஏறக்குறைய கூட்டணியை இறுதி செய்துவிட்டன. மீதமிருக்கும் சிறு கட்சிகளும் வரவிருக்கும் நாட்களில் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசோ, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக காத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ், விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டுமென திமுகவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று திமுக தொகுதி பங்கீடு குழு, முதல் கட்சியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், கடந்த முறையைவிட அதிக இடங்கள் வேண்டும் என கோரியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், விருப்ப தொகுதிகளின் பட்டியலையும் கே.சி. வேணுகோபால், முதலமைச்சரிடம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதையும், அவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதையும் கே.சி. வேணுகோபாலிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்திருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.
குறிப்பாக சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாடு அரசியல் சூழல், மாநிலங்களவைத் தேர்தல் உள்ளிட்டவைக் குறித்து ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபாலிடம் சில கருத்துகள் கூறி, அது குறித்தும் இன்றைய சந்திப்பில் பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து திமுக தொகுதி பங்கீடு குழுவுடன், காங்கிரஸ் கட்சி குழு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதாகவும் அதில் தொகுதி எண்ணிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் இறுதி செய்யப்படும் எனச் சொல்லப்படுகிறது.
.png)







English (US) ·