முதலை தென்பட்ட விவகாரம்: செந்தோசா கடற்கரைகளில் நீர் விளையாட்டுகள் தொடங்க அனுமதி

2 hours ago 19

ae46cd0b-4d3b-4ef9-b620-75bd41927d5b

ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து எஸ்டிசியும் தேசிய பூங்காக்கழகமும் தொடர்ந்து மேற்கொண்ட சுற்றுக் காவல் கண்காணிப்புப் பிறகு முதலை தென்படவில்லை என்று எஸ்டிசி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். - படம்: லியான்ஹ சாவ்பாவ்

செந்தோசாவின் மூன்று கடற்கரைகளிலும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து (பிப்ரவரி 8) நீர் விளையாட்டுகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் முதலை தென்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு இது பற்றி கேட்டதற்கு, செந்தோசாத்தீவு மேம்பாட்டு கூட்டுநிறுவனத்தின் (எஸ்டிசி) பேச்சாளர் ஒருவர், “ஜனவரி 31 முதல் எஸ்டிசியும் தேசிய பூங்காக் கழகமும் நடத்திய தொடர்ச்சியான தினசரிக் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுக் காவலுக்குப் பிறகு செந்தோசா நீர்நிலைகளில் முதலையைப் பார்க்க முடியவில்லை,” என்றார்.

“இதன் அடிப்படையில், நீச்சல், படகோட்டம் உட்பட இதர நீர் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கலாம்.

“எஸ்டிசி தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும், நிலைமை மாறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 31ஆம் தேதி செந்தோசா கோவ் வீட்டுக்கு அருகே முதலை தென்பட்டதால் செந்தோசாவின் சிலோசா, பலவான், தஞ்சோங் கடற்கரைகள் மூடப்பட்டன.

இதனை பரிசீலித்த எஸ்டிசியும் தேசிய பூங்காகக் கழகமும் கூட்டாக முதலையைத் தேடி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இதற்கிடையே பலவான் கடற்கரையில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மெட்டாஸ்பிரிண்ட் நீர் விளையாட்டுப்போட்டி பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பிப்ரவரி 1ஆம் தேதி மரினா சவுத் பியர் நீர்ப்பகுதியில் ஒரு முதலை தென்பட்டதாகக் கூறப்பட்டதால் தேசிய பூங்காக் கழகம் அதன் குழுவை சுற்றுக் காவலில் ஈடுபடுத்தியதாக எஸ்டிசி ஒரு ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தது. ஆனால் அது, அதே முதலையா என்பதை அது தெரிவிக்கவில்லை.

அதே நாளில் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம், செயிண்ட் ஜான்ஸ், செரிங்காட், லாசரஸ், கூசு தீவுகளுக்கு அருகே உள்ள நீர்ப் பகுதிகளில் அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை நீச்சல், படகோட்டம் உள்ளிட்ட நீர் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி ஆர்எஸ்எஸ் சிங்கப்பூர்- சாங்கி கடற்படை தளத்திற்கு அருகே தமது வீரர்கள் முதலையைப் பார்த்ததாக சிங்கப்பூர் கடற்படை கூறியது.

செந்தோசா கடற்கரைகள் நீர் விளையாட்டுகளுக்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டாலும் ம் பொதுமக்கள் கட்டாயம் பாதுகாப்பு அறிவிப்புக் குறியீடுகளையும் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று எஸ்டிசி அறிவுறுத்தியுள்ளது.

முதலை தென்பட்டாலோ அல்லது எதிர்கொண்டாலோ உடனடியாக தேசிய பூங்காக் கழகத்தின் விலங்கு நடவடிக்கை நிலையத்தின் 1800-476-1600 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article