மோடி வீட்டின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதாகி பின்னர் விடுதலை

2 hours ago 6

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் அருகே ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் திடீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

நீட், சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் மோடி ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் திங்கட்கிழமை (ஜூலை 20) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்திய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் களப் போராட்டத்தைத் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்ததையடுத்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டின் முன் ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.

இதையடுத்து, அங்கிருந்துப் பேரணியாகப் புறப்பட்டுச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் இல்லத்திற்கு அருகே பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீஷன் உள்ளிட்டோர் இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் இல்லம் நோக்கிப் பேரணியாகச் சென்றதாக ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பொறுப்பேற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இளையர்களின் எதிர்காலத்தைச் சீரழித்ததற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் காந்தி தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் சந்தித்துப் பேசினார். அப்போது போராட்டத்தைக் கைவிடுமாறு அவர் விடுத்த வேண்டுகோளை ராகுல் காந்தி ஏற்காததால் அவர் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து, பிரதமர் மோடியின் வீட்டருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை காவல்துறையினர் குண்டுக்கட்டாக அங்கிருந்து அகற்றியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Read Entire Article