ரிலையன்ஸ் கச்சா எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை மூடல்

1 hour ago 15

69e00e95-7c8e-4882-a9a9-9ab9bce3d14c

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவைத் தற்காலிகமாக மூட ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ச் சுத்திகரிப்பு வளாகத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவைத் தற்காலிகமாக மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் வளாகத்தில் உள்ள இந்தப் பிரிவு நாளொன்றுக்கு 660,000 பீப்பாய்கள் அளவிலான எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது.

இந்தப் பிரிவு இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்கான பெட்ரோல், டீசல் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அமெரிக்கா - ஈரான் மோதலால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதை அடுத்து கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன் எரிசக்தி நெருக்கடியும் உருவானது.

இந்தியாவில் இது நேரடியாக இதுவரை பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் வணிக எரிவாயு, விமான எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் நாட்டில் விலைவாசி உயர்ந்தது. மேலும், இந்தியாவுக்கு அரபு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்யும் குறைந்தது.

இவ்வேளையில், ஆண்டுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான பராமரிப்புப் பணி காரணமாக ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதப் பிற்பாதியில் இந்தப் பணிகள் தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைய நான்கு வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய மத்திய பெட்ரோலிய அமைச்சின் இணைச்செயலாளர் சுஜாதா சர்மா, “ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் நாட்டில் பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயுத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே தேவையான அளவு எரிபொருளைக் கையிருப்பில் வைத்துள்ளன என்றார் அவர்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதே வளாகத்தில் மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது என்றும் அது வழக்கம்போல் இயங்கும் என்பதால் பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறினார்.

Read Entire Article