ரோபோட்டிக் துறையில் புதிய மைல்கல்: நெல்லை இளைஞரின் 'டெக்னோவிஷன்' நிறுவனம் சாதனை!

17 hours ago 13

Last Updated:May 12, 2026 12:40 PM IST

மனிதர்களின் கை மற்றும் உடல் அசைவுகளை துல்லியமாக பிரதிபலிக்கும் இந்த ரோபோ, அதிநவீன தொழில்நுட்பத்தின் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

+

News18

News18

தொழில்நுட்ப உலகில் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'டெக்னோவிஷன்' நிறுவனம் ரோபோட்டிக் மற்றும் ட்ரோன் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிர்த்திக் குமார் இது குறித்து பேசுகையில், "எங்கள் நிறுவனம் தொழில்துறை ரோபோக்கள், மனித உருவம் கொண்ட ரோபோக்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் சர்விங் ரோபோக்கள் என பல்வேறு வகைகளை தயாரித்து வருகிறது. மேலும், விவசாயம் மற்றும் சினிமா துறைகளுக்கான அதிநவீன ட்ரோன்களையும் தயாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறைக்கு அதை கொண்டு சேர்க்கும் வகையில் மாணவர்களுக்கு நேரடி பயிற்சியையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற தேசிய தின விழாவை முன்னிட்டு, சுமார் 70 மாணவர்களுக்கு ரோபோட்டிக் மற்றும் ட்ரோன்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இதையும் வாசிக்க : NEET | மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து

வருகிற மே 31-ஆம் தேதி, 'கார்ட்டோ பாட்ஸ்' என்ற பெயரில் 24 புதிய வகை ரோபோட்டிக் கிட்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் சிலந்தி ரோபோக்கள், நாய் ரோபோக்கள் மற்றும் தொழில்துறை ரோபோக்களின் மாதிரிகள் என கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

பொறியியல் மூன்றாம் ஆண்டு பயிலும் போதே இந்த நிறுவனத்தை தொடங்கியதாக கூறும் கிர்த்திக் குமார், தற்போது 20-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் ஜார்கண்ட், ஹரியானா, மும்பை, பெங்களூரு என இந்தியா முழுவதும் தங்கள் தயாரிப்புகளை விநியோகித்து வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். விரைவில் சென்னையிலும் புதிய கிளை தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக 24 டிகிரி ஆஃப் ஃப்ரீடம் கொண்ட அதிநவீன 'செமி ஹியூமனாய்டு' ரோபோவை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது மனிதர்களின் கை மற்றும் உடல் அசைவுகளை துல்லியமாக பிரதிபலிக்கும் திறன் கொண்டது. வருங்காலத்தில் முழுமையான மனித உருவம் கொண்ட, தானாகவே நடக்கும் திறன் பெற்ற ரோபோக்களை உருவாக்குவதே இவர்களின் அடுத்த இலக்காகும். நெல்லையில் இருந்து உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் இந்த இளைஞரின் முயற்சி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Tirunelveli,Tirunelveli,Tamil Nadu

First Published :

May 12, 2026 12:40 PM IST

Read Entire Article