வட்ட ரயில் பாதையின் இறுதி மூன்று ரயில் நிலையங்கள் வரும் ஜூலை 12ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஜெப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.
கெப்பல், கெண்டன்மென்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய மூன்று நிலையங்களும் திறக்கப்படுவதன் மூலம் ஹார்பர்ஃபிரண்ட் - மரினா பே நிலையங்களுக்கு இடையிலான இணைப்பு நிறைவுபெற்று வட்டப் பாதை முழுமையடைகிறது.
பிரின்ஸ் எட்வர்ட் ரோடு வட்ட ரயில் பாதை நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
புதிய இணைப்பின் மூலம் பாசிர் பாஞ்சாங் முதல் மரினா பே வரையிலான பயண நேரம் ஏறக்குறைய 10 நிமிடங்கள் குறையும் என்று கெண்டன்மென்ட் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை (மே 14) நடைபெற்ற லசால் கலைக் கல்லூரியின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த 4 கிலோ மீட்டர் நீளத் திட்டம், கொவிட்-19 பெருந்தொற்று, சுரங்கப்பாதை வலுப்படுத்தும் பணிகளால் தாமதமடைந்தது.
நிலையங்கள் திறக்கப்படுவதற்கு முன்னதாக, ஜூலை 4ஆம் தேதி காலை 9.30 முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் புதிய மூன்று நிலையங்களுக்கு இடையே இலவசமாகப் பயணம் செய்து அவற்றைப் பார்வையிடலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கெண்டன்மென்ட் நிலையம் பழைய தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தின் வடிவமைப்பை உள்ளடக்கியும், கெப்பல் நிலையம் கேபிள் கார் போன்ற காற்றோட்ட வசதிகளுடனும், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு நிலையம் சிங்கப்பூரின் கடல்சார் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய நிலையங்களைத் திறப்பதற்கான இறுதிக்கட்டச் சோதனைகள் நடைபெற்று வருவதால், மே 17 வரை வார இறுதி நாள்களில் வட்டப் பாதை ரயில் சேவையின் செயல்பாட்டு நேரம் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
33 நிலையங்களுடன் 39 கிலோ மீட்டர் தூரம் வரை நீளும் இந்த முழுமையான வட்டப் பாதை சிட்டி ஹால், ராஃபிள்ஸ் பிளேஸ் போன்ற நெரிசலான சந்திப்புகளைத் தவிர்க்க பயணிகளுக்குப் பெரிதும் உதவும்.
வட்ட ரயில் பாதை 2009ஆம் ஆண்டு பார்ட்லி, சிராங்கூன், லோரோங் சுவான், பீஷான், மேரிமவுண்ட் ஆகிய ஐந்து நிலையங்களுடன் திறக்கப்பட்டது.
.png)








English (US) ·