வலியில் பிறந்து வலிமையில் மலர்ந்த இளையர்

3 hours ago 18

செம்பவாங் காட்டுப்பகுதியில், 1996ல் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று குடும்ப வன்முறையிலிருந்து தப்பி ஓடிய பெண் ஒருவர், புதர்களுக்கு நடுவே பிரசவித்தார்.

அவருக்கு உதவ மருத்துவர்களோ, செவிலியர்களோ, தலைக்கு மேல் ஒரு கூரையோ கூட இல்லை. மரங்களின் நிழல் மட்டுமே அவருக்கு அடைக்கலமானது.

அருகிலிருந்த மரங்களிலிருந்து மாம்பழங்களைப் பறித்து உண்டு அவர் உயிர்பிழைத்தார். அவருடன் இருந்த உறவினர் மருத்துவ வாகனத்தை அழைத்ததையடுத்து தாயும் குழந்தையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்தச் சூழலில்தான் டினோ ஐசக் இந்த உலகிற்குள் நுழைந்தார்.

திரு டினோவின் பிறப்புச் சான்றிதழ்; அதில் அவர் பிறந்த இடம் செம்பவாங்கில் உள்ள கம்பாஸ் அவென்யூவில் புதர்கள் சூழ்ந்த ஒரு திறந்தவெளிப் பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு டினோவின் பிறப்புச் சான்றிதழ்; அதில் அவர் பிறந்த இடம் செம்பவாங்கில் உள்ள கம்பாஸ் அவென்யூவில் புதர்கள் சூழ்ந்த ஒரு திறந்தவெளிப் பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. - படம்: டினோ ஐசாக்

சிதைந்த பால்யம்

கிட்டத்தட்ட மூன்று வயதாக இருந்தபோது, தமது தாய், பாட்டி மற்றும் உடன்பிறந்தவர்களுடன் டினோ ஐசக் (நடுவில்).

கிட்டத்தட்ட மூன்று வயதாக இருந்தபோது, தமது தாய், பாட்டி மற்றும் உடன்பிறந்தவர்களுடன் டினோ ஐசக் (நடுவில்). - படம்: டினோ ஐசக்

உறவினர்களால் ‘மௌக்லி’ (Mowgli) அல்லது ‘காட்டு பையன்’ என்று அழைக்கப்பட்ட திரு டினோவின் குழந்தைப்பருவம், நிலையான ஒரு வீடு இல்லாமல் கழிந்தது. பெற்றோர் தம்மை பார்த்துக்கொள்ள இயலாத நிலையில் இவர் வெவ்வேறு உறவினர்களுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

“அக்காலத்தில் எனக்கு வீடு என்றால் என்னவென்று புரியவில்லை. புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய விதிகள் என நான் எப்போதும் என்னை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது,” என்று இப்போது 29 வயதாகும் திரு டினோ நினைவுகூர்ந்தார்.

அந்த விதிகள் பல சமயங்களில் மிகக் கொடூரமானவை. அவருக்கு 3 வயதாக இருந்தபோது, ஒரு பாதுகாவலர் அவரது கையை முறுக்கி உடைத்ததாக அவர் கூறினார். தண்டனையாகச் சொந்த மலத்தையே உண்ணும்படி திரு டினோ கட்டாயப்படுத்தப்பட்டார். இதுபோன்ற பல்வேறு வகையான குடும்ப வன்முறைக்கு அந்த இளம் வயதில் ஆளானதாக அவர் கூறினார்.

இன்றும் அவரது இடது கையில் உள்ள நீண்ட தழும்பு, அந்த நாள்களை அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெற்றோருடன் வாழ்ந்த சிறிது காலமும் அவருக்கு நிம்மதி தரவில்லை. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அடிக்கடி சிறைக்குச் சென்று வந்த தந்தையால் வீட்டில் அமைதி நிலவவில்லை.

தமது இளம் வயதில் திரு டினோ ஐசக்.

தமது இளம் வயதில் திரு டினோ ஐசக். - படம்: டினோ ஐசக்

“சுவர்களில் ரத்தம் தெறித்திருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்,” என்று திரு டினோ கூறினார். தந்தையிடமிருந்து தப்பி, தாயுடன் மேம்பாலத்திற்கு அடியில் தூங்கிய இரவுகள், பல ஆண்டுகள் நூடுல்ஸை மட்டுமே நம்பி வாழ்ந்த நாள்கள் சிறுவயதிலேயே கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு அவர் ஆளானார்.

தனிமையின் வலி

5 முதல் 15 வயது வரை, சால்வேஷன் ஆர்மியின் ‘தி ஹேவன்’ சிறுவர் இல்லத்தில் அவர் வளர்ந்தார். அது ஒரு விதத்தில் அவருக்கு பாதுகாப்பைத் தந்தாலும், தனிமையையும் அதிகரித்தது. பள்ளி நண்பர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டுக்குச் சென்றபோது, தாம் மட்டும் உணவுக் கூடத்தில் தனியாக அமர்ந்து சாப்பிட்டதை திரு டினோ நினைவுகூர்ந்தார்.

அவருக்கு 13 வயதாக இருந்தபோது, தந்தை ஒரு வன்முறைச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். தந்தையின் இழப்பு அவருக்குத் துயரத்துடன் குழப்பத்தையும் தந்ததாக அவர் கூறினார்.

“என்னைத் துன்புறுத்தியவர் போய்விட்டார் என்ற நிம்மதி ஒருபுறம் இருந்தாலும், எனக்கு அப்பா இல்லை என்ற உண்மையை மறுபுறம் உணர்ந்தேன்,” என்றார் அவர்.

தங்ளின் ஹால்ட்டில் ஈரறை வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்த தமது தாயுடனும் சகோதரர்களுடனும் 15 வயதில் திரு டினோ மீண்டும் இணைந்தார். ஆனால் இடநெருக்கடி, குடும்பச் சண்டைகள் காரணத்தால் அவர் மீண்டும் சிறார் இல்லத்திற்குத் திரும்ப முடிவுசெய்தார். தமது முதல் வேலை கிடைக்கும் வரை அவர் அங்கேயே தங்கியிருந்தார்.

கல்வியில் தடுமாற்றம், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மேற்கொண்ட படிப்பில் தோல்வி எனச் சோதனைகள் தொடர்ந்தன. ஆனால், தேசிய சேவையைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

புதிய வாழ்க்கை

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர், திரு டினோவின் நேர்த்தியான தோற்றத்தையும் தெளிவாகப் பேசும் திறனையும் கவனித்து, விமானத் துறையில் சேருமாறு ஊக்கப்படுத்தினார். அது அவரது வாழ்க்கையை மாற்றிய தருணம்.

திரு டினோ முதலில் ‘ஸ்கூட்’ விமான நிறுவனத்தில் விமானப் பணிக்குழு உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பணியில் இணைந்தார்.

22 வயதில் மாதம் 5,000 வெள்ளிக்கு மேல் சம்பளம். “ஒன்றுமில்லாத நிலையில், மேம்பாலத்திற்கு அடியில் தூங்கிக்கொண்டிருந்த நான், திடீரென்று லண்டனில் வந்து இறங்கினேன்,” என்று தாம் வியந்துபோனதை அவர் நினைவுகூர்ந்தார்.

லண்டனில் திரு டினோ.

லண்டனில் திரு டினோ. - படம்: டினோ ஐசக்

அந்த வேலையின் மூலம் கிடைத்த பண வசதி, இதற்கு முன் அவர் ஒருபோதும் பெற்றிராத பாதுகாப்பைத் தந்தது. உணவுக்கும் இருப்பிடத்திற்கும் கவலை இல்லை.

விமானப் பணிக்குழு வேலையைச் சிலர் அவ்வப்போது ஏளனமாகப் பேசினாலும், அந்தப் பணி அவருக்குப் பெருமிதத்தையே அளித்தது. “இந்த வேலையில் எவ்வளவு பொறுப்புகள் உள்ளன என்பதை மக்கள் உணர்வதில்லை,” என்று அவர் கூறினார். “என்னைப் பொறுத்தவரை, இவ்வேலை என் வாழ்க்கையையே காப்பாற்றியது.”

சொந்தமாக ஒரு கொண்டோமினியம் வீடு, உணவகங்களில் விருந்து, கிரீஸ், தென்னாப்பிரிக்கா, நியூயார்க் எனப் பல நாடுகளுக்குப் பயணம் என திரு டினோவின் வாழ்க்கை உயர்ந்தது. ஆனால், அந்த ஆடம்பர வாழ்க்கைக்குப் பின்னால் ஒரு வெறுமை மறைந்திருந்தது.

மனப்போராட்டம்

“நான் விரும்பியதால் தனியாக வாழவில்லை. வேறு வழியில்லாததால் தனியாக வாழ்ந்தேன்,” என்று அவர் கூறினார்.

ஐந்து ஆண்டுகள் விமானத்துறையில் பணியாற்றிய பிறகு, 2023ல் அவர் அந்த வேலையை விட்டார். பின்னர், உணவு, பானத்துறையில் மக்கள்தொடர்பு மேலாளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.

ஆனால், தனிமையும் தாம் கைவிடப்பட்டுவிட்டோம் என்ற உணர்வும் அவரைத் தொடர்ந்து அரித்துக்கொண்டிருந்தன. அந்த வேலை முடிந்ததும், உடனடியாக அடுத்த வேலையைத் தேடுவதில் இறங்காமல், தமது மனநலத்திற்காகச் சிறிது காலம் ஓய்வெடுக்க அவர் முடிவு செய்தார்.

“நான் கடந்து வந்த அத்தனை துயரங்களுக்கும் பிறகு, வாழ்வதற்கு இனி ஒன்றும் இல்லை என்று எனக்குத் தோன்றியது. அதுமட்டுமல்லாமல், இந்த உலகின் மீது எனக்குக் கடுமையான கோபமும் இருந்தது,” என்றார் திரு டினோ.

மனத்தளவில் மிகவும் உடைந்துபோயிருந்த ஒரு தருணத்தில் 2025ல் திரு டினோ தற்கொலைக்கு முயன்றார்.

“என் கண் முன் என் வாழ்க்கை மின்னியது. எனக்கு அவ்வளவு பயமாக இருந்தது,” என்றார் திரு டினோ.

அந்த முயற்சியிலிருந்து உயிர் பிழைத்தபோது, தமக்கு உதவி தேவை என்பதை அவர் உணர்ந்தார். உடனே, அவர் ஒரு குடும்பச் சேவை நிலையத்தை நாடிச் சென்றார். அது அவரை ஒரு மாத காலம் மனநலக் கழகத்தில் தங்கி சிகிச்சை பெற வழிவகுத்தது.

மருத்துவர்கள், சமூகப் பணியாளர்கள், ஆலோசகர்கள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில், அவருக்கு ஒரு புதிய தெளிவு பிறந்தது.

“நான் என் வாழ்நாள் முழுவதும் காப்பகங்களிலேயே கழித்தேன். சமூகப் பணித் துறை சார்ந்த கல்வியையும் என் வாழ்க்கை அனுபவத்தையும் இணைத்தால், என்னால் பலருக்கு உதவ முடியும் என்று நினைத்தேன்,” என்று திரு டினோ கூறினார்.

தற்போது நன்யாங் பலதுறைத்தொழிற்கல்லூரியில் சமூகப்பணித் துறையில் படிக்க விண்ணப்பித்துள்ளார்.

கடினமான சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகள், இளையர்கள் ஆகியோரின் வாழ்வை புத்தக அறிவால் மட்டுமன்றி, தம் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வழியாகவும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் சமூகப்பணியாளராக உருவாக விரும்புகிறார். தமக்குக் காலத்தில் கிடைக்காமல் போன வழிகாட்டுதலின் இடத்தை நிரப்பும் ஒரு பாலமாக பிறருக்கு திகழ வேண்டும் என்பதே அவரது கனவு.

தாயுடன் மறுஇணைப்பு

ஒருகாலத்தில் ஆறாத வடுவாக இருந்த தாயாருடனான உறவைச் மேம்படுத்துவதில் இப்போது அவரது நேரமும் மனமும் செலவாகிறது. 2023 ஆண்டிறுதியில், பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமது 59 வயது தாயார் திருவாட்டி சஹாதேவி அழகப்பனுடன் அவர் மீண்டும் இணைந்தார். மற்ற உடன்பிறப்புகள் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, தாயாரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்று, அவர் தாயின் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.

தாயுடன் சேர்ந்து வாழும் அனுபவம், அவரும் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்பதையும், அவர் கடந்து வந்த போராட்டங்களையும் திரு டினோவுக்கு உணர்த்தியுள்ளது. “முன்பு அவர்மீது எனக்குத் தீராத மனக்கசப்பு இருந்தது. ஆனால், அந்நாள்களில் நடந்த பல விஷயங்கள் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்று அவர் ஒப்புக்கொண்டார்.

டினோ ஐசக்கும், 29, அவரது தாயார் சஹாதேவி அழகப்பனும், 59.

டினோ ஐசக்கும், 29, அவரது தாயார் சஹாதேவி அழகப்பனும், 59. - படம்: யோகிதா அன்புச்செழியன்

அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு பணிகள், குறிப்பாக சமையல், தாய், மகன் இருவருக்கும் இடையிலான பிணைப்பை மெல்ல மெல்ல வலுப்படுத்தி வருகின்றன.

சாம்பார், ரசம், சொதி போன்ற பாரம்பரியத் தமிழ் உணவுகளைத் திருவாட்டி சஹாதேவியிடமிருந்து கற்றுக்கொள்வது, தமது கலாசார வேர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு வழியாக திரு டினோவுக்கு அமைந்துள்ளது.

காப்பகங்களில் வளர்ந்ததால் அந்தத் தொடர்பை இழந்ததாக நீண்டகாலம் அவர் உணர்ந்து வந்தார்.

ஒரு நாள் மனம் திறந்து இருவரும் பேசியபோது, புதர்களுக்கு இடையே அவர் பிறந்த அந்த நாளில், முதலுதவிப் பணியாளர் ஒருவர் தம்மைத் தத்தெடுக்க முன்வந்ததாகத் திருவாட்டி சஹாதேவி கூறியதை திரு டினோ நினைவுகூர்ந்தார்.

அப்போது அவர் அந்த வாய்ப்பை மறுத்திருந்தாலும், திரு டினோ வாழ்க்கையில் சந்தித்த வேதனைகளைப் பார்த்த பின்னர், “இப்போது யோசித்துப் பார்க்கையில், உன்னைத் தத்தெடுக்கக் கொடுத்திருக்கலாம். நீயாவது நல்லபடியாக வாழ்ந்திருப்பாய்,” என்று தாய் கூறியதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

தம்மைப் பாதுகாக்க முடியவில்லையே என்ற தாயின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அந்த வார்த்தைகள், தமக்கு ஒரு வகையான நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக திரு டினோ குறிப்பிட்டார்.

தம் மகன் வாழ்க்கையைச் சீரமைத்து, முன்னேறும் பாதையில் நடப்பதைப் பார்ப்பது திருவாட்டி சஹாதேவிக்கு நிம்மதியை அளிப்பதாக கூறினார்.

“அவன் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவான். அவன் நன்றாகப் படிப்பான் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார். “நீ நல்லவனாக இருந்தால், மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று நான் எப்போதும் அவனிடம் சொல்வேன்.”

நம்பிக்கையின் குரல்

தற்போது, டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் தமது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து வரும் திரு டினோ, வளர்ப்புச் சூழலால் வாழ்க்கையில் முடங்கிப் போனதாக உணரும் பலருக்கும் நம்பிக்கையின் குரலாகத் திகழ்கிறார்.

இதனிடையே, ‘தி ஜங்கிள் பாய்’ (The Jungle Boy) என்ற தலைப்பில் தமது வாழ்க்கைப் பயணத்தைத் தொகுத்த தன்வரலாற்று நூலையும் அவர் எழுதி வருகிறார்.

‘தி ஜங்கிள் பாய்’ என்ற தலைப்பில் தமது வாழ்க்கைப் பயணத்தைத் தொகுத்த தன்வரலாற்று நூலை எழுதிகொண்டிருக்கிறார் திரு டினோ ஐசாக்.

‘தி ஜங்கிள் பாய்’ என்ற தலைப்பில் தமது வாழ்க்கைப் பயணத்தைத் தொகுத்த தன்வரலாற்று நூலை எழுதிகொண்டிருக்கிறார் திரு டினோ ஐசாக். - படம்: யோகிதா அன்புச்செழியன்

சிறுவயது திரு டினோவிடம் இன்று என்ன சொல்ல விரும்புகிறார் என்ற கேள்விக்கு, “நீ இவ்வளவு துன்பங்களைத் தாண்டி வந்ததற்குக் காரணம், நீ சாதாரணமானவன் அல்ல. நீ தனித்துவமானவன்; வலிமை கொண்டவன்,” என்று அவர் கூறினார்.

“சிறு வயதில் நமக்கு நிகழும் பல சம்பவங்கள் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. ஆனால் நாம் பெரியவர்களாகிய பிறகு, அதற்கான தீர்வாக மாறும் பொறுப்பும் சக்தியும் நம்மிடமே உள்ளது,” என்றார் திரு டினோ.

Read Entire Article