கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை மிகுந்த ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருவது ஊர் அறிந்த செய்தி. ஏறத்தாழ 40 ஆண்டுகளில் முதல்முறையாக, அதாவது 1980க்குப் பின் ஒரே நாளில் பெரிய வீழ்ச்சியைக் கண்டது தங்கத்தின் விலை.
வெள்ளியும் பிளாட்டினமும்கூட இந்த விலை வீழ்ச்சிக்குத் தப்பவில்லை.
கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை 60 விழுக்காடு உயர்ந்தது. இச்சூழல் பல மாதங்களாக நிலவிய நேரத்தில்தான் சட்டென தலைகீழாக மாறியது சந்தையின் போக்கு.
பணவீக்கம் குறித்த அச்சம் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கச் செய்கிறது. - படம்:ராய்ட்டர்ஸ்
ஜனவரி இறுதியில் தங்கத்தின் விலை 12 விழுக்காடும் வெள்ளியின் விலை 26 விழுக்காடும் குறைந்தன. அதேபோல் பிளாட்டினத்தின் விலையும் 18 விழுக்காடு சரிந்தது.
வெனிசுவேலா, கிரீன்லாந்து, ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் அரசியல் குழப்பங்களைக் கணிசமானோர் காரணம் காட்டினாலும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி சார்ந்த நிலைப்பாடுகளில் அதிகரிக்கும் உறுதியின்மை காரணமாகத்தான் இந்தக் கள நிலவரம் என்று அரசியல் ஆய்வாளர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
‘பணவீக்கப் பருந்து’
அமெரிக்க மத்திய (ஃபெடரல்) ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக கெவின் வார்ஷை நியமிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வங்கியின் முன்னாள் தலைவர் ஜெரோம் பொவெல், டிரம்ப்பின் கொள்கைகளுக்குத் தடையாக இருந்துவந்த நிலையில், அவரது புதிய தேர்வான கெவின் வார்ஷ், அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தும் வகையில் கடுமையான நிதிக் கொள்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
வரலாறு திரு கெவின் வார்ஷை ‘பணவீக்கப் பருந்து’ என்று வருணிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்துள்ளார் என்பதால், அவரது நியமனம் குறித்த அறிவிப்பு அமெரிக்கச் சந்தைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால், தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வந்தவர்கள் திடீரென அமெரிக்க பங்குச் சந்தையிலும், அமெரிக்க அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்வதில் தங்கள் கவனத்தைத் திருப்பினர். உலகளாவிய நிலையில் பங்குவிலைகள் ஏற்றம் கண்டன. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து தங்கத்தின் விலை சரிந்தது.
தொடக்கத்தில் அமெரிக்க நடவடிக்கைகளால் தென்கொரியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் டாலர்மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்க நேரிட்டதால், அதன் நீட்சியாக, பல்வேறு நாடுகளின் வங்கிகள் டாலரை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியதன் விளைவாக அதன் விலை உயர்ந்தது.
திசைதிரும்பிய கவனம்
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவானதால், தங்கம், வெள்ளி மீதான முதலீட்டில் குவிந்திருந்த முதலீட்டாளர்களின் கவனமும் திசைதிரும்பியது.
இதனிடையே, சூரிய மின்சக்தித் தகடுகள், மின்வாகனங்கள் உள்ளிட்ட ‘பசுமை எரிசக்தி’ தொழில்துறை போன்றவற்றால் வெள்ளிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மேலும், பணவீக்கம் குறித்த அச்சங்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்க வைக்கின்றன.
‘ஜேபி மோர்கன்’ நிறுவனத்தின் கருத்துப்படி, 2026 இறுதிக்குள் தங்கத்தின் விலை ஓர் அவுன்ஸ் $5,055 எனும் நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் வலிமையானால் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் விலை குறையும் என்பதுதான் பொருளியல் உலகின் மாற்றப்படாத விதி.
எனினும், டாலரின் தற்போதைய வலிமை, மேலும் சில தொழில்நுட்ப ரீதியிலான காரணிகள் காரணமாக, வருங்காலத்தில் தங்கத்தின் விலை குறையக்கூடும் அல்லது மீண்டும் உயரவும் நேரலாம் என்றும் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஆனால், தங்கத்தின் விலை உயர்வுக்கான விதை அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த காலத்திலேயே போடப்பட்டுவிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, உக்ரேனை ரஷ்யா தாக்கியது. அதையடுத்து, ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்துகளை அமெரிக்கா முடக்கியது. அதனால் அதிருப்தி அடைந்த நாடுகள் தங்கள் சேமிப்புகளை டாலரிலிருந்து தங்கத்திற்கு மாற்றத் தொடங்கின. ரஷ்யா, சீனா, துருக்கி என பல நாடுகள் அதனைச் செய்யத் தொடங்கின. அதன்பின்னரே தங்கத்தின் விலை ஏற ஆரம்பித்தது.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை, கடன் பத்திரங்கள் உள்ளிட்ட இதர முதலீடுகளில் தங்கத்தை வைத்திருப்பது லாபகரமானதல்ல எனப் பரவலாகக் கருதுகின்றனர்.
அவ்வகையில், இப்போதையச் சூழலில் தங்கத்தை நகையாக வாங்குவதா அல்லது மின்னிலக்கத் தங்கமாக வாங்குவதா என்ற கேள்வியும் எழாமலில்லை.
ஆயினும், 3.8 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருக்கும் இந்தியக் குடும்பங்கள் உட்பட பலரும் பங்குச் சந்தை நிலவரம் எப்படி மாறினாலும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தையே நம்புகின்றனர். அதனால், இன்றளவும் அவர்களின் விருப்பப் பட்டியலில் தங்கமே முன்னணியில் இருக்கிறது. விலைச் சரிவு தங்கம் வாங்குவதைப் பாதிக்கவில்லை.
.png)






English (US) ·