Last Updated:Jul 22, 2026 6:47 AM IST
தமிழ்நாட்டில் 2 வார இடைவெளியில் அரிசி விலை மீண்டும் கிலோ 15 ரூபாய் வரை உயர்ந்து நடுத்தர மக்களின் தலையில் இடியாய் இறக்கி உள்ளது. அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்? எவ்வளவு விலை உயர்ந்துள்ளது?.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில மக்களின் உணவில் இன்றியமையாத ஒன்றாக அரிசி விளங்குகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஆண்டு அரிசி நுகர்வு ஏறத்தாழ 85 லட்சம் மெட்ரிக் டன் என்றால், அதில் 35 சதவீதம் டெல்டா மாவட்டங்களில் இருந்து பெறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல் வகைகள், மாநில அரசின் பொது விநியோக திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் ஆண்டுக்கு 40 லட்சம் மெட்ரிக் டன் வரை பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
அதேநேரம், தமிழக மக்களின் தினசரி அரிசி தேவையில் கர்நாடக பொன்னி, ஆந்திரா பொன்னி, சோனா மசூரி, அக்சயா பொன்னி, தன்வீர், ஆர்என்ஆர் உள்ளிட்ட பிற அரிசி வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், நடப்பாண்டு போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் கடந்த 15 நாட்களுக்கு முன் கர்நாடக பொன்னி, ஆந்திரா பொன்னி அரிசி விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் குருவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை போதிய தண்ணீர் இன்றி இதுவரை திறக்கப்படாததால் நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சன்ன ரக அரிசி வகைகளான கிச்சிலி சம்பா, தூய மல்லி, சீரக சம்பா, பொன்னி உள்ளிட்ட அரிசி வகைகள் கிலோவுக்கு 8 ரூபாய் வரை விலை உயர்ந்து ஒரு கிலோ 52 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக விற்கப்படுகிறது.
அதேபோல் மோட்டா ரகமான CR 1009, AST 16, பொன்மணி புழுங்கல் உள்ளிட்ட அரிசி வகைகள் கிலோவுக்கு 3 ரூபாய் வரை விலை உயர்ந்து ஒரு கிலோ 38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட மைசூர் பொன்னி தற்போது 65 ரூபாய்க்கும், இட்லி அரிசி 46 ரூபாயில் இருந்து 48 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேபோல், நாட்டு பொன்னி அரிசி 55 ரூபாயில் இருந்து 68 ரூபாய்க்கும், சீரக சம்பா அரிசி 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மற்ற ரக அரிசிகள் கிலோவுக்கு 2 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 90 ரூபாய் வரை விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்தியதால், அரிசி ஆலைகளுக்கு நேரடியாக கிடைக்க வேண்டிய நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் நெல் தட்டுப்பாட்டால் ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனையான ஒரு சிப்பம் அரிசி தற்போது ஆயிரத்து 450 ரூபாய் வரை விலை உயர்ந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழக மக்களின் அன்றாட உணவுத் தேவையில் அரிசி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் சட்டவிரோத அரிசி பதுக்கல்கள் ஏதேனும் நடக்கிறதா என அரசு விசாரிக்க பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 வார இடைவெளியில் அரிசி விலை மீண்டும் உயரக் காரணம் என்ன?
2 வார இடைவெளியில் அரிசி விலை மீண்டும் உயர்வு.
அரிசி விலை மீண்டும் உயரக் காரணம் என்ன?
மீண்டும் கிலோ 15 ரூபாய் வரை உயர்ந்து நடுத்தர மக்களுக்கு பாதிப்பு.
.png)







English (US) ·