20 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் நிரபராதி என 30 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

2 hours ago 18

087b47ba-ccae-4f37-93f5-3db4850e3402

பாபுபாய் பிரஜாபதி. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

அகமதாபாத்: குஜராத்தில் ரூ.20 லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கக் கோரி, கடந்த 30 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தியவர், நிரபராதி என்று இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தீர்ப்பு வெளிவந்த மறுநாளே அந்த அப்பாவி காலமாகிவிட்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் பாபுபாய் பிரஜாபதி (64 வயது). கடந்த 1996ஆம் ஆண்டு லாரி ஓட்டுநர் ஒருவரிடம் ரூ.20 லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதான அவர், நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பிறகும் தன் நேர்மையை நிரூபிக்க நினைத்த அவர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

நீண்டகாலம் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், கடந்த 4ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. பாபுபாய் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், நிரபராதி என அறிவித்து லஞ்ச வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இதன்மூலம் பாபுபாய் நடத்தி வந்த 30 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது. தீர்ப்பு வெளியானதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பாபுபாய், தன் வாழ்நாளின் பெரும் பகுதி சட்டப்போராட்டத்தில் கழிந்துவிட்டது என்றும் தன் மீதான களங்கம் களையப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், “இனி கடவுள் என்னை அழைத்துக் கொண்டாலும் எந்தவிதத் துக்கமும் இருக்காது. நான் நேர்மையான மனிதனாக இறந்து போவேன்,” என்றும் உணர்ச்சிவசப்பட்டார்.

இந்நிலையில், தீர்ப்பு வந்த மறுநாளே பாபுபாய் இயற்கையான காரணங்களால் மரணமடைந்தார்.

Read Entire Article