27 வருடமாக கடலில் விவசாயம்.. மீனவர்களின் மாற்றுத் தொழிலாக கைகொடுக்கும் கடல்பாசி வளர்ப்பு..!

1 hour ago 20

Last Updated:Feb 10, 2026 10:48 AM IST

மண்டபம் முகாம் முனைக்காட்டினைச் சேர்ந்த முகமது நூஹ் என்ற மீனவர் மீன்பிடி தொழிலுக்கு மாற்று தொழிலாக கடந்த 27 வருடங்களாக கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டு அசத்தி வருகிறார்.

+

கடல்பாசி

கடல்பாசி வளரப்பில் ஈடுபடும் மீனவர்

ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் நீண்ட கடற்கரை உடைய பகுதியாக உள்ளதால் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. பாக்ஜலசந்தி கடலில் மீன்களின் வரத்து குறைவு, இலங்கை கடற்படை பிரச்சனை போன்ற பல பாதிப்புகளை மீனவர்கள் சந்திப்பதால் மீனவர்கள், கூண்டு மீன் வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு போன்ற பல மாற்றுத் தொழிலை மீனவர்கள் கடலில் செய்து வருகின்றனர்.

கடல்பாசி என்பது கடல் மற்றும் நன்னீரில் வாழும் கடல் தாவரமாகும்‌. இவற்றில் பல வகை உள்ளது. இதில் கப்பாபைகஸ், பெப்சிபாசி, மரிக்கொழுந்து போன்ற பாசிகள் வளர்ப்பில் மீனவர்கள், மீனவ பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடல்பாசி வளர்ப்பு என்பது சதுரம்‌ அல்லது செவ்வக வடிவில் மூங்கில் கட்டைகளில் கயிறு கட்டி கயிற்றில் கடல்பாசி கட்டி வைக்கின்றனர். ஒவ்வொரு மூங்கில் தட்டிற்கும் 65 கிலோ கடல்பாசி வைக்கப்படுகிறது. 45 நாட்கள் கடலில் வைத்தால் போதும் 200 கிலோ வரை எடை உயர்ந்து காணப்படும். இதனை காயவைத்து அல்லது அப்படியே விற்பனை செய்து வருமானம் பெறுகின்றனர் மீனவர்கள். நிலத்தில் விவசாயம் செய்வதுபோல் கடலிலும் விவசாயம் செய்வது வருகின்றனர்.

இதுபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் முனைக்காடு பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் முகமது நூஹ் என்பவர் கடந்த 27 வருடங்களாக கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். கடல்பாசி வளர்ப்பு குறித்து முகமது நூஹ் கூறுகையில், மீனவ குடும்பத்தைச் சேர்ந்த நான்‌ கடந்த 27 வருடங்களாக கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். இலங்கை கடற்படை பிரச்சனை, மீன்களின் வரத்து குறைவு போன்ற பல பாதிப்புகள் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று தொழிலாக கடல்பாசி வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினேன்.

அக்வா ஃபௌண்டேஷன் மூலமாக முதன் முதலில் பயிற்சி பெற்று கடல்பாசியை மானிய விலையில் பெற்று கடல் மேல் கடல்பாசி விவசாயம்‌ மேற்கொள்ளத் துவங்கி பயனடைந்தேன். மேலும், ஆரம்பகாலத்தில் ஒரு தட்டிக்கு 400 கிலோ வரை கடல்பாசி வளர்ந்து நல்ல லாபம்‌ பார்க்க முடிந்தது. காலப்போக்கில் கடல் வெப்பம் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் கடல்பாசியின் வீரியம் குறைந்து பாதிக்கு பாதியாக மகசூல் கிடைத்து வருகிறது. நிரந்தரமான வருமானம் இதில் இல்லை, காலநிலைக்கு ஏற்ப வருமானம் அதிகமாக கிடைக்கும், குறைவாகவும் இருக்கும், அதிகப்பட்சமாக மாதம் ரூ.40,000 வரை‌ வருமானம் பெற‌முடியும்.

கப்பாபைகஸ் கடல்பாசி ஜெல்லி, சாக்லேட், ஊறுகாய், உணவுப்பொருள், தையல் நூல், உரம், அழகுசாதனப் பொருட்கள், கால்நடை தீவனங்கள் போன்ற 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கடற்பாசி வெளிநாடு வரை ஏற்றுமதியாகிறது. பச்சையாக உள்ள கடல்பாசி கிலோ ரூ.16க்கும், காயவைத்து கடல்பாசி ரூ.120 வரையிலும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

கடல்பாசிக்கு சந்தைகளில் நல்ல விலை இருந்தாலும் வியாபாரிகள் குறைவான விலைக்கு வாங்கி செல்கின்றனர். அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் பாசிகளை தடை செய்தால் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள். நாங்கள் நிர்ணயிக்கும் விலை கிடைக்கும், ஆண்டிற்கு கிலோ இரண்டு‌ ரூபாய் விலை ஏற்றம் செய்ய வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது. கடல்பாசி வளர்ச்சியை வேளாண் தொழிலாக மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும். வங்கிக்கடன் மற்றும் காப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Ramanathapuram,Ramanathapuram,Tamil Nadu

First Published :

Feb 10, 2026 10:48 AM IST

Read Entire Article