சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு... நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2 hours ago 17

Last Updated:Feb 10, 2026 12:24 PM IST

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News18
News18

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராம் அடுத்த வாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர்கள் சிலைகளில் இருந்த தங்க கவசங்கள், செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது சுமார் நான்கரை கிலோ தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், தேவசம் வாரியத்தின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்கக்கவசங்களில் உள்ள தங்கம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட போது, நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து அவை பூஜை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவருடன் ஜெயராம் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில், சென்னை வந்த சிறப்பு புலனாய்வு குழு, ஜெயராமிடம் அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். இதன் அடுத்தகட்டமாக, ஜெயராமிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு சம்மன் அனுப்பியுள்ளது. கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஜெயராம் அடுத்த வாரம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக கடந்த மாதம் மத்திய அரசின் அனுமதியுடன் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, இதுவரை 12 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய 12 பேரில் 3 பேரின் பெயர்கள் மட்டுமே சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

Feb 10, 2026 12:24 PM IST

Read Entire Article