9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆக்ரோஷத்தை காட்டிய காட்டு யானை..

10 hours ago 9

Last Updated:October 13, 2025 8:30 PM IST

வால்பாறை வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அருகே யானை தாக்கியதில் அசலா மற்றும் 3 வயது ஹேமாஸ்ரீ உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை
வால்பாறை

வால்பாறையில் யானை தாக்கியதில் 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமாகும். தேயிலை தோட்டங்களால் பசுமை நிறைந்த மலையும் மலை சார்ந்த பகுதியாகவும் உள்ளது. இதனால், யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட அச்சுறுத்தும் விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.

குறிப்பாக, பகல், இரவு பேதமின்றி யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதை காண முடியும். யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள தேயிலை விலங்குகள் குறித்து உள்ளூர ஓர் அச்சம் இருந்த கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக உணவு தேடி அழையும் யானைகள் வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகியுள்ளது.

இந்த நிலையில் வால்பாறை வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அருகே ஊமையாண்டி முடக்கு பகுதியில் ஒற்றை யானை இரவில் நடமாடியுள்ளது. அதிகாலை 3 மணியளவில் குடியிருப்புக்குள் நடமாடிய அந்த யானை, மாரிமுத்து என்பவரின் வீட்டு பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது, ஜன்னல் தடுப்புக்காக வைத்திருந்த ஓட்டை இடித்து தள்ளி தலையை உள்ளே விட்டுள்ளது. தொடர்ந்து தும்பிக்கையால் வீட்டிற்குள் ஏதேனும் உள்ளதா என தேடியுள்ளது. உள்ளே அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்தவர்கள் ஜன்னல் வழியாக யானை தலையை விட்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

உடனே, அசலா, தனது 3 வயது பேத்தி ஹேமாஸ்ரீயை தூக்கிக் கொண்டு வாசல் பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென ஆக்ரோஷமான யானை வாசல் பகுதியில் இருந்த அசலாவை தாக்கியுதுடன், அவர் கையில் இருந்து கீழே விழுந்த குழந்தையின் தலைப் பகுதியில் மிதித்துள்ளது. அதைக் கண்டு அங்கிருந்த குழந்தையின் தாய் உள்ளிட்ட மற்ற பெண்கள் கத்தி கூச்சலிட்டதும யானை அங்கிருந்து கிளம்பியுள்ளது. யானை மிதித்ததில், தூக்க நிலையில் இருந்த பிஞ்சுக் குழந்தை நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

படுகாயமடைந்த அசலாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு வால்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோரித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அடர்ந்த காட்டுக்குள் நள்ளிரவு 'ஜண்டா' பூஜை.. புதையலுக்காக நரபலியா..? விசாரணையில் திடுக் தகவல்!

பின்னர், குடியிருப்பு பகுதியில் தனியாக உலாவிய ஒற்றை யானை மற்றும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் யானைகளையும் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாட்டி மற்றும் பேத்தியை தாக்கி கொன்ற இந்த யானை தான், கடந்த பிப்ரவரி மாதம் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெர்மனி சுற்றுலாப் பயணியை தாக்கி கொன்றது. அவ்வப்போது குடியிருப்புக்குள் நுழையும் யானை, தற்போது 3 வயது குழந்தை உட்பட இருவருக்கு எமனாக மாறியுள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தும் யானையை, பிடித்து அடர்ந்த வனப்பகுதி அல்லது யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.

First Published :

October 13, 2025 8:30 PM IST

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆக்ரோஷத்தை காட்டிய காட்டு யானை.. வால்பாறையில் திக் திக் சம்பவம்!

Read Entire Article