Last Updated:October 14, 2025 3:53 PM IST
Bigg Boss 9: பிக் பாஸ் போட்டியில் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்படுவதற்காகவே ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்களைத் தேர்வு செய்வதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் பல்வேறு வகையான ஸ்ட்ராட்டஜிகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அதே சமயம் பிக் பாஸ் குழுவும் தங்களின் சில ஸ்ட்ராட்டஜிகளை செயல்படுத்தி நிகழ்ச்சியைச் சுவாரஸ்யமாக வைத்திருப்பது தெரியும்.
குறிப்பாக, ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில வயதான போட்டியாளர்கள், துறையில் ஆக்டிவ் ஆக இல்லாதவர்களை வீட்டுக்குள் அனுப்புவது வழக்கமான ஒன்று. இது ஒரு பக்கம் வீட்டின் சமநிலையைப் பேணுவதற்காகவும், மற்றொரு பக்கம் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை அளிக்கவும் செய்யப்படுகிறது.
அந்த வகையில் சில நேரங்களில், அந்த மூத்த போட்டியாளர்கள் வீட்டுக்குள் சுவாரஸ்யமான கருத்துகள், அனுபவங்கள் அல்லது அமைதியான அணுகுமுறை மூலம் அனைவரின் மனதையும் கவர்வார்கள். ஆனால் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாமல் போனால், அவர்கள் சில வாரங்களிலேயே வெளியேற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. இதுவே “பிக் பாஸ் மூத்தவர்களை அனுப்புவது ஒரு ஸ்ட்ராட்டஜி” என்ற பொதுவான கருத்தை உருவாக்கியுள்ளது.
இதே மாதிரியான நிலைமை தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9லும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சீசனின் முதல் வார எவிக்ஷனாக இயக்குநர் பிரவீன் காந்தி வெளிறினார். பிரவீன் காந்தி வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். ஆனால், அவர் முதல் ஆளாக வெளியேற்றப்படக் காரணம் வயதான போட்டியாளர் என்பதுடன் மட்டுமல்லாமல், அவரின் சில கருத்துகளும் காரணமாக அமைந்தது.
முதல்நாளிலேயே பெண்களைப் பற்றிய கருத்துக்களில் பிரவீன் காந்தி “ஆண்களை விட பெண்கள் பொறாமை குணம் கொண்டவர்கள்” என கூறியது வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியேயும் எதிர் கருத்துக்களைப் பெற்றது. மேலும் நந்தினி உடனே “அப்படி கிடையாது” என தனது கருத்தை வெளிப்படுத்தினார். இதனால் வீட்டுக்குள் சிறிய வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்த நிகழ்வு பார்வையாளர்களிடமும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மேலும் தண்ணீர் பிடிக்கும் டாஸ்கில் வாட்டர் சூப்பர் வைஸர் தேர்வு செய்யும் போது “பெண்கள் வேண்டாம், பெண்களால் இழுக்க முடியாது” என அவர் சொன்னபோது, சுபிக்ஷா உடனே “அப்படி சொல்லக் கூடாது, பெண்களால் முடியும்” என எதிர்வாதம் செய்தார். இது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பிரவீன் காந்தி மீது விமர்சனங்களைக் கிளப்பியது.
இப்படி பிரவீன் காந்தி தன்னுடைய கருத்துக்களைப் பொதுவான கருத்துக்களாகக் கூறும் போது அவர் மீது எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாகக் கூட அவர் பெருவாரியான மக்களால் அறியப்பட்டவராக இருந்தாலும் குறைவான ஓட்டுக்களைப் பெற்று வெளியேறியுள்ளார்.
இது பிக்பாஸ் முதல் வாரத்தில் மூத்தவர்களை வெளியேற்றும் வழக்கமான யுக்தி என பலரும் விமர்சித்தாலும் சுரேஷ் சக்ரவர்த்தி, விசித்ரா என சிலர் தங்கள் ஆட்ட யுக்தியால் போட்டியில் பல நாட்கள் நிலைத்து நின்றுள்ளனர். பிரவீன் காந்தி அவரது கருத்தின் எதிர்வினையால் கூட குறைவான வாக்கு பெற்று வெளியேறி இருக்கலாம் எனவும் பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 3:53 PM IST