Doctor Vikatan: 2 வாரங்கள் வாக்கிங்கை மிஸ் செய்தாலே சர்க்கரை நோய் வந்துவிடுமா?

2 hours ago 11

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:3 mins agoUpdated:3 mins ago

வாக்கிங்கை மிஸ் செய்தாலே சர்க்கரைநோய் வந்துவிடுமா?

வாக்கிங்கை மிஸ் செய்தாலே சர்க்கரைநோய் வந்துவிடுமா? ( AI image )

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் உள்ளது. ப்ரீ டயாபட்டிக் நிலையில் உள்ளவர்கள் வெறும் இரு வார ஓய்வு எடுத்தாலே, அதாவது நடைப்பயிற்சி செய்யாமலே அது முழு அளவிலான சர்க்கரை நோயாக மாறிவிடும் என ஓர்  ஆய்வுச் செய்தியைச் சமீபத்தில் வாசித்தேன்.

'உங்களுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீடயாபட்டீஸ் இருந்தால், இரண்டு வாரங்கள் நடைப்பயிற்சி செய்யாமல் பிரேக் எடுத்தாலே கதை முடிந்தது' என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு. இது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

The Gerontological Society of America ஆண்கள், பெண்களைக் கொண்டு சிறிய ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் வயதானவர்கள். ஆண்களின் சராசரி வயது 69 மற்றும் பெண்களின் சராசரி வயது 70.

பொதுவாகவே வயது கூடும்போது தசை இழப்பு (Muscle loss) ஏற்பட்டு, தசைகள் சற்று பலவீனமடையும். இதனால், வழக்கமாக உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களது நடைப்பயிற்சியைக் குறைத்துக்கொண்டு ஓய்வெடுக்கும்போது, அவர்களின் தசை நிறை (Muscle mass) மேலும் குறைகிறது என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

தவிர, சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள் உடற்பயிற்சியைக் குறைக்கும்போது, அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் (Insulin resistance) சற்று அதிகரிக்கும். அதுதான் நீங்கள் கேள்விப்பட்ட  ஆய்விலும் நடந்திருக்கும்.

இந்த ஆய்வின்படி, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீடயாபட்டீஸ் இருந்தவர்கள் அதே நிலையிலேயேதான் தொடர்கிறார்களே தவிர, பெரிய அளவில் சர்க்கரை நோய் நிலைக்கு மாறவில்லை. 

தசை நிறை குறையும் போதும், ஓய்வெடுக்கும் போதும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதால் சர்க்கரை அளவு (Sugar level) சற்று உயரக்கூடும்.

தசை நிறை குறையும் போதும், ஓய்வெடுக்கும் போதும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதால் சர்க்கரை அளவு (Sugar level) சற்று உயரக்கூடும். Photo: Pixabay

இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நல்ல தசை நிறை கொண்ட, சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருக்கும் பொது மக்களிடம் 'நீங்கள் இரண்டு வாரங்கள் நடைப்பயிற்சி செய்யவில்லை என்றால் சர்க்கரை நோய் வந்துவிடும்' என்று கூற முடியாது.

பொதுவாகவே வயதானவர்கள் ஏதேனும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் வரை ஓய்வில் இருக்கும் போது அவர்களின் தசை நிறை குறையும்.

அவ்வாறு தசை நிறை குறையும் போதும், ஓய்வெடுக்கும் போதும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதால் சர்க்கரை அளவு (Sugar level) சற்று உயரக்கூடும். இது ஒரு பொதுவான மருத்துவ உண்மை.

அத்தகைய நோயாளிகளுக்கு நாம் பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சை அளித்துதான் மீண்டும் நடக்க வைப்போம். எனவே, இதை வைத்து நடைப்பயிற்சி போகவில்லை என்றால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்று கூறி யாரையும் பயமுறுத்தத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Read Entire Article