Doctor Vikatan: பற்களைச் சுத்தம் செய்யும் ஸ்கேலிங் சிகிச்சையால் பற்கள் ஆட்டம் காணுமா?

1 hour ago 11

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Just NowUpdated:Just Now

ஸ்கேலிங் சிகிச்சையால் பற்கள் ஆட்டம் காணுமா?

ஸ்கேலிங் சிகிச்சையால் பற்கள் ஆட்டம் காணுமா? ( freepik )

Doctor Vikatan: பல் மருத்துவர்களை அணுகினால், அடிக்கடி பற்களைச் சுத்தம் செய்யும் ஸ்கேலிங் சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள்.  

ஸ்கேலிங் சிகிச்சை செய்தால் பற்கள் ஆட்டம் காணுமா, பற்களின் எனாமலை பாதிக்குமா... அதேபோல நாக்கில் சுரண்டி எடுக்க முடியாத வெள்ளை நிறப் படிவம் இருப்பது ஏன்... அதற்கு என்ன தீர்வு? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பல் மருத்துவர் கிருப்நாத்

பல் மருத்துவர் கிருப்நாத்

பல் மருத்துவர் கிருப்நாத்

பற்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். ஸ்கேலிங் (Scaling) முறையில் பல் மருத்துவர்கள் பற்களை முறையாகச் சுத்தம் செய்வார்கள். காரை படிந்த, முறையாகப் பராமரிக்கப்படாத, சுத்தமாக இல்லாத பற்கள்தான் ஆரோக்கியம் இழக்கும், ஆட்டம் காணும். ஸ்கேலிங் சிகிச்சை பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவே செய்யும்.

ஸ்கேலிங் முறையில் பற்களில் உள்ள கடினமான காரைகளை (Tartar) நீக்குவதற்கு, ஆபத்தற்ற அல்ட்ராசோனிக் அதிர்வுகள் (Ultrasonic vibrations) மற்றும் தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றன. மனித உடலிலேயே மிகக் கடினமான பகுதியான உங்கள் எனாமலை வெட்டும் அளவுக்கு அவை சக்தி வாய்ந்தவை அல்ல.

பற்களைச் சுத்தம் செய்த பிறகு உங்கள் பற்கள் ஆடுவதுபோல் தோன்றினால், பற்களுக்கு இடையே ஏற்கெனவே ஏற்பட்டிருந்த எலும்பு இழப்பை (Bone loss) அங்கு படிந்திருந்த காரைகள்  மறைத்துக் கொண்டிருந்தன என்றே அர்த்தம். பற்களைச் சுத்தம் செய்வது இந்தச் சேதத்தைத் தடுக்குமே தவிர, பற்களைப் பாதிக்காது. எனவே, மருத்துவர் அறிவுறுத்தும்படி குறிப்பிட்ட இடைவெளிகளில் ஸ்கேலிங் சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.

பற்களைச் சுத்தம் செய்வது இந்தச் சேதத்தைத் தடுக்குமே தவிர,  பற்களை பாதிக்காது.

பற்களைச் சுத்தம் செய்வது இந்தச் சேதத்தைத் தடுக்குமே தவிர, பற்களை பாதிக்காது.

உணவுக் கழிவுகளால் நாக்கில் ஏற்படும் சாதாரணப் படிவத்தை மிக எளிதாகச் சுரண்டி எடுத்துவிடலாம். ஆனால், அது நாக்கில் மாவு தூவியது போலவோ அல்லது பாலாடைக்கட்டி (Cottage cheese) போலவோ பிடிவாதமாக ஒட்டிக்கொண்டு, அதைத் துடைக்கும்போது அடியில் உள்ள பகுதி சிவந்து புண்ணாகக் காணப்பட்டால், அது  பூஞ்சைத் தொற்றாக இருக்கலாம்.

இதை மருத்துவர்கள் 'ஓரல் த்ரஷ்' (Oral thrush) என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் ஆன்டிபயாடிக் (Antibiotics) மருந்துகளை உட்கொண்ட பிறகோ, ஸ்டீராய்டு இன்ஹேலர்கள் (Steroid inhalers) பயன்படுத்திய பிறகோ அல்லது வாய் வறட்சி (Dry mouth) ஏற்படும்போதோ தோன்றும்.

எனவே, அதை வலுக்கட்டாயமாகச் சுரண்ட வேண்டாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இதற்கான பூஞ்சை எதிர்ப்பு மருந்தை (Anti-fungal prescription) எடுத்துக்கொண்டாலே, பிரச்னை சரியாகும். தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Read Entire Article