Last Updated:May 20, 2026 9:57 AM IST
Homemade Tomato Jam | பிரியாணியின் காரச் சுவைக்கு செம்மையான காம்பினேஷனாக இருக்கும் பாய் வீட்டு ஸ்டைல் தக்காளி ஜாம்! கல்யாண வீட்டு மணமும் நாவில் கரையும் இனிப்பும் சேர்ந்த இந்த ஸ்பெஷல் ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்து பாருங்கள்.

முஸ்லிம் வீட்டுத் திருமண விசேஷங்கள் மற்றும் பாய் வீட்டுப் பிரியாணி விருந்துகளில் பரிமாறப்படும் அந்தத் தனித்துவமான, பளபளப்பான தக்காளி ஜாம் மிகவும் பிரபலமானது. பிரியாணியின் காரச் சுவைக்கு இந்த இனிப்பான ஜாம் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். கல்யாண வீட்டுச் சுவையில் இந்த தக்காளி ஜாமை வீட்டிலேயே எப்படிச் செய்வது என்பதை பார்க்கலாம்.
தக்காளி ஜாம் செய்வதற்கு நன்கு பழுத்த தக்காளி 4 கிலோ தேவைப்படும். இதில் பெங்களூர் தக்காளி அல்லது ஆப்பிள் தக்காளி பயன்படுத்தினால் புளிப்பு குறைவாக இருப்பதால் சுவை மேலும் நன்றாக இருக்கும். இதனுடன் தக்காளியின் புளிப்பிற்கு ஏற்ப 350 முதல் 400 கிராம் வரை சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். மேலும் விதை நீக்கிய பேரிச்சம்பழம் 5 முதல் 10, முந்திரி பருப்பு 10 முதல் 15, தேவையான அளவு உலர் திராட்சை, அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் 4 முதல் 5 மேஜைக்கரண்டி நெய் தேவைப்படும். இவை அனைத்தும் சேரும்போது கல்யாண வீட்டு ஸ்டைலில் நாவில் கரையும் சுவையான தக்காளி ஜாம் தயாராகும்.
முதலில் தக்காளியை நன்றாகக் கழுவி, அதன் காம்புப் பகுதியை நீக்க வேண்டும். பின்னர் அதை சுடு தண்ணீரில் நன்றாக வேக வைத்து, தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் பேரிச்சம்பழத்தையும் சுடு தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி மற்றும் பேரிச்சம்பழத்தை மிக்ஸி ஜாரில் அல்லது வெஜிடபிள் சாப்பரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம்.
இப்போது ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்க வேண்டும். தக்காளியின் பச்சை வாசனை முழுமையாக நீங்கி, அதிலுள்ள தண்ணீர் சுண்டி நெய் பிரிந்து வரும் வரை சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் கிளறிக் கொண்டே வதக்கவும். இந்த நிலையில்தான் ஜாமின் உண்மையான சுவை உருவாகும்.
பின்னர் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கும்போது ஜாம் அல்வா பதத்திற்கு வந்து, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும். அந்த நேரத்தில் ஏலக்காய் தூள், வதக்கிய முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.
சுவையான, கல்யாண வீட்டு ஸ்டைல் “பாய் வீட்டு தக்காளி ஜாம்” தயார். குழந்தைகள் வித்தியாசமான இனிப்பு வகை கேட்டால் கண்டிப்பாக இந்த ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.

Safety Pin-ல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா?
துளை ஸ்பிரிங் போல செயல்பட்டு முள் முனையை உறுதியாக பிடிக்க உதவுகிறது.
ஸ்பிரிங் அமைப்பு இல்லையெனில், கூர்மையான முனை மீண்டும் மீண்டும் திறக்கும்.
ஒரு கம்பியை வளைப்பதன் மூலம் அவர் இந்த ஸ்பிரிங்-லோடட் அமைப்பை உருவாக்கினார்.
.png)





English (US) ·