18 வயது இளையரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்பட்ட மூவரும் குற்றம் நிகழ்ந்த நாளிலேயே அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று ஆடவர்கள் மீது இன்று (மே 11) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளது.
அவர்கள் 20 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் என்று காவல்துறை திங்கட்கிழமை (மே 11) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
யூ தோங் சென் ஸ்திரீட்டில் சண்டை நடப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. ஒரு பிரச்சினை தொடர்பாக 18 வயது இளையரை அந்த மூவரும் சேர்ந்து தாக்கியதாக, ஆரம்பகட்ட விசாரணை தெரிவித்தது.
உதடுகளில் காயமடைந்த அந்த இளையர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவோடு இருந்தார்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல்துறையின் கேமராக்களின் காணொளிகளைக் காவல்துறை பயன்படுத்தியது. தீவிர விசாரணைக்குப் பின்னர் சந்தேக நபர்கள் அதே நாளில் கைது செய்யப்பட்டனர்.
கலவரத்தில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
.png)





English (US) ·