அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டக்காரர்கள் தொலைபேசி மூலம் அழைத்ததாகப் புகார்கள் அளிக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர்கள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காவல்துறை, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், தலைமைச் சட்ட அதிகாரி ஆகிய அரசாங்க அமைப்புகளிலிருந்து பேசுவதாகக் கூறி தொலைபேசி மூலம் தொடர்புகொள்வோரிடம் கவனமாக இருக்கும்படி அவர்கள் தெரிவித்தனர்.
அவ்வாறு தொலைபேசியில் பேசும் சந்தேக நபர்கள் ஆள்மாறாட்டம் செய்வோர். அத்தகைய ஆள்மாறாட்ட மோசடியின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) அறிக்கை வெளியிட்டன.
அத்தகைய மோசடிக்காரர்கள் காவல்துறை அதிகாரி அல்லது அரசாங்க அதிகாரி போல் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் அழைப்பு விடுப்பார்கள்.
அத்தகையோரின் அழைப்பை எடுப்பவர்களிடம் அவர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் குற்றச்செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மோசடிக்காரர்கள் கூறி, விசாரணையில் உதவும்படி தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வரும்படி சொல்வார்கள்.
காவல்துறை சீருடையை அணிந்து அதிகாரியைப் போலவும் துணை அரசாங்கம் வழக்கறிஞர் போலவும் மோசடிக்காரர்கள் தங்களைக் காண்பித்து தொடர்புகொண்டது குறித்து சிலர் புகார் அளித்துள்ளனர்.
தங்கள் அடையாள அட்டை எண் போன்ற தனிப்பட்ட விவரங்களைக் கூறும்படியும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வங்கிக் கணக்குப் பணம் அனுப்பும்படியும் தங்களிடம் கூறப்பட்டதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஒருசில தருணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட விவரங்களைக் குறிப்பிட்டு ஆய்வொன்றை நிறைவேற்றும்படியும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களின் தொலைபேசி சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் அல்லது முடக்கப்படும் என்றும் மோசடிக்காரர்கள் மிரட்டியுள்ளனர்.
மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போகும்போது அல்லது அரசாங்க அமைப்புகளிடம் சரிபார்த்த பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டோர் அறிந்துகொண்டனர்.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
அரசாங்க அதிகாரிகள் ஒருபோதும் பொதுமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்கமாட்டார்கள் அல்லது பணத்தைப் பரிவர்த்தனை செய்யும்படி கூறமாட்டார்கள்.