எல்லா தொகுதியிலும் மினி ஸ்டேடியம்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

3 hours ago 13

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்புக்கு ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2025 நிறைவு விழாவில் பேசியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2025 நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

விளையாட்டுத்துறைக்கு ரூ.1,945.07 கோடி ஒதுக்கீடு

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் கோப்பை 2025 போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:

“அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்புக்கு ரூ.170.31 கோடி மட்டுமே ஒதுக்கினார்கள். ஆனால், கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். விளையாட்டுத்துறைக்கு மொத்தமாக ரூ.1,945.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகம் போல் வேறு எந்த மாநிலத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற உதவி கிடைப்பதில்லை.

அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உங்களுக்கான அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம். விளையாட்டில் கவனம் செலுத்தி, வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித் தாருங்கள்.

திமுக ஆட்சி விளையாட்டுத்துறையின் பொற்காலம். விளையாட்டுத் துறையை நானே கவனிக்கலாம் என்று ஏக்கம் வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இத்தனை திறமையான இளைஞர்களை அடையாளம் காண்பதற்காக உழைத்த, உழைத்து கொண்டிருக்கக்கூடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். இளைஞர்களின் நலனையும், விளையாட்டுத் துறையையும் 'The Young and Energetic Minister'-இடம் ஒப்படைத்தால் அது எப்படி வெற்றிகரமாக அமையும் என்பதற்குத் தமிழ்நாடு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Read Entire Article